RENCANA PILIHAN

கொடுப்பதற்காகத்தான் பிரபஞ்சம் காத்திருக்கிறது

மனிதனுக்குள்ள மாபெரும் சக்தியே படைப்பாற்றலாகும் (CREATIVITY).  காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதகுலத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு படைப்பாற்றல் மட்டுமே வித்தாக இருந்தது. ஒரு சிலர் மட்டுமே புதுமைகள் படைக்கவும், புரட்சிகள் வெடிக்கவும் தலைமையேற்கிறார்கள். யாருமே வழிகாட்டாமல், இவர்களுக்கு மட்டும் புதிய சிந்தனைகள் தோன்றுவது எப்படி?.

ஒரே காரியத்தில் தவம் போன்ற சிந்தனை, தீர்வை மட்டுமே நோக்கிய செயல், பதட்டமில்லாத நிதானம் இவை மட்டுமே படைப்பாற்றல் வெளிப்படுவதற்கான தளம் ஆகும். இங்குதான் புதியன படைக்கும் சிந்தனைகள் தோன்றுகின்றன. தீர்வுகள் பிறக்கின்றன. இவை ஏற்கனவே இப்பிரபஞ்ச கர்ப்பத்தில் இருந்தவைதான்.

தன்னை நம்பாத தாழ்வு மனப்பான்மையும், முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுவும், வெற்றி பெறுவதற்கான படைப்பாற்றலைத் தடுத்துவிடும். பிரபஞ்சத்தில் இருக்கும் தீர்வுகளுக்கான புதிய சிந்தனைகள் தேக்கமடைந்துவிடும்.

கவலையும், பயமும், மனச்சோர்வும் இப்பிரபஞ்சத்தில் சூழ்கொண்டுள்ள உங்களுக்கான தீர்வுக்கு பாலமாக இருக்கும் படைப்பாற்றல் எனும் பேராற்றலுக்கு திரை போட்டுவிடும்.

எக்காரியத்தில் ஈடுபட்டுள்ளீர்களோ அதில் தவமாக செயல்படுங்கள். தோல்விகளில் துவண்டுவிடாதீர்கள். தோல்வி எனும் படிக்கட்டுகளில் ஏறித்தான் வெற்றி மாளிகையில் நுழைய முடியும். பிரச்சனைகளைப்பற்றிப் பேசுவதை நிறுத்தி, தீர்வை நோக்கி மட்டும் சிந்தியுங்கள்.

இறையின் அளப்பரிய பேராற்றலின் வெளிப்பாடுதான் இப்பிரபஞ்சம். அனைவருக்கும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகத்தான்
இயங்கிக் கொண்டிருக்கிறது.

உங்கள் தேவையை இப்பிரபஞ்சத்தில் பதிவு செய்யுங்கள். தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். சளைக்காமல், அயராத உழைப்பை கொடுங்கள். தீர்வு என்ன என்று மட்டும் சிந்தியுங்கள். படைப்பாற்றல் வெளிப்படும். தீர்வுகள் தென்படும். தாமதங்கள் தோல்வியல்ல. பயணம் தொடரட்டும். வெற்றி நிச்சயம்.

தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம்


Pengarang :