NATIONALUncategorized @ta

ஆவி வாக்காளர்களை நீக்கக் கோரி கேசவன் எஸ்பிஆர் முன்பு உண்ணாவிரதம்

புத்ரா ஜெயா, ஜூன் 23:

பல்வேறு குளறுபடிகளை கொண்ட புதிய வாக்காளர் பட்டியலில் ஆவி வாக்காளர்கள் குறிப்பாக பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்தான் மெலின்தாங் சட்ட மன்றத்தில் 3000 மேற்பட்டவர்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக மலேசிய தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது என்று ஊத்தான் மெலின்தாங் சட்ட மன்ற உறுப்பினரும் கெஅடிலான் கட்சியின் தேசிய துணைப் பொதுச் செயலாளருமான கேசவன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நேற்று தன்னுடைய ஆதரவாளர்கள் புடைசூழ மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் முன்பு 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை காலை மணி 11 மணிக்கு தொடங்கினார். உண்ணாவிரதத்தை தொடங்கும் முன் எஸ்பிஆர் தலைவரை சந்திக்க வேண்டி காத்திருந்தும் எந்த ஒரு பதிலும் வராத காரணத்தால் தமது போராட்டத்தை தொடங்கினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு காவல்துறை அதிகாரிகள் கேசவனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் எஸ்பிஆர் அதிகாரிகள் எந்த ஒரு கோரிக்கைக்கும் செவிமடுக்க மறுத்து விட்டனர்.

இதனிடையே கேசவனின் போராட்டத்தை கேள்வியுற்ற கெஅடிலான் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் எஸ்பிஆர் தலைமையகத்தை முற்றுகை இட்டனர். இரவு மணி 8 மணிக்கு புத்ரா ஜெயா நகராண்மை அமலாக்க அதிகாரிகள் கட்டப் பட்ட பதாகைகள் மற்றும் கூடாரத்தை அப்புறப்படுத்த கேட்டுக் கொண்டனர். ஆனாலும் பேச்சுவார்த்தைக்கு பிறகு பதாகைகள் மட்டும் அப்புறப்படுத்தப் பட்டது.

தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த கேசவன் இரவு 11 மணி அளவில் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த சூழ்நிலையில் ஏற்பாட்டு குழுவினர் கேசவன் உடல் நிலை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து புத்ரா ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு இன்று காலை 7 மணிக்கு வீடு திரும்ப அனுமதி வழங்கினர். இதையடுத்து கேசவன் நடந்த சம்பவத்தை ஒட்டி புத்ரா ஜெயா மாவட்ட காவல்துறையில் புகார் ஒன்றை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, உடல்நலம் காரணமாக உண்ணாவிரதப் போராட்டம் நின்று போனாலும் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட தில்லுமுல்லுகளை எதிர்த்து தமது போராட்டம் தொடரும் என்று நினைவு படுத்தினார்.

 

தகவல்: கு.குணசேகரன் குப்பன், சிலாங்கூர் இன்று


Pengarang :