SELANGOR

கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை உணவகம் திறக்க அனுமதி வழங்கப்பட்டது

ஷா ஆலம், ஆகஸ்ட் 20:

கடந்த வெள்ளிக்கிழமை மாலை மூடும் உத்தரவு வழங்கப்பட்ட கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் உணவகம், அதே நாளில் இரவு 10 மணி அளவில் மீண்டும் செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது. இந்தத் தகவலை தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் டிங் லாய் மிங் பெர்னாமாவிடம் உறுதிப் படுத்தினார். கிள்ளான் மாவட்ட சுகாதார அலுவலக அதிகாரிகள் மறுசோதனையிட்ட பிறகு, அம்மருத்துவமனையின் உணவகம் சுகாதார முறையில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் விதிமுறைகளை பின்பற்றி உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

சமூக வலைதளங்களில் ஒரு எலி காய்கறி தட்டில் சாப்பிடும் காட்சி மிக பரவலாக பகிர்ந்து கொள்ளப் பட்டது அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து கிள்ளான் மாவட்ட சுகாதார அலுவலகம் மூடும் உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் ஸைலான் அட்னான் கூறுகையில், இந்த உணவகம் மருத்துவமனை வருகையாளர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டதாக கூறினார்.

தகவல்: பெர்னாமா


Pengarang :