MEDIA STATEMENT

கோழையான அம்னோ-பிஎன் மக்களை அச்சுறுத்துவது ஒன்றும் புதிது அல்ல

அம்னோவின் தலைவர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் கடந்த ஜூலை 29 அன்று பாரிட் அம்னோ தொகுதியின் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் மக்களை பயமுறுத்தவில்லை என்று கூறியது உண்மையில் ஒரு பொய்யான கூற்றாகும்.

சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் அம்னோ தேசிய முன்னணி பொது மக்களை பயமுறுத்தியே நாட்டை நிர்வகிக்கித்து வருகிறது. அரசாங்க தகவல் ஊடகங்கள் வழியாக எதிர்க்கட்சிகளை நாட்டின் எதிரிகள் போல சித்தரித்து மக்களிடையே நல்லவர்களாக நடித்து வெற்றி பெற்றது சரித்திரமாகும். அதிலும் குறிப்பாக அம்னோ வாக்காளர்களிடம் ஜனநாயக செயல் கட்சி  (டிஏபி) ஆட்சிக்கு வந்தால் மலாய்காரர்கள் அல்லது பூமிபுத்ரா சலுகைகள் பறிமுதல் செய்யப்படும் என்று பொய்ப் பிரச்சாரம் மூலமாக பயமுறுத்தியே நாட்டை நிர்வகிக்கும் திறமை கொண்டவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்றைய காலகட்டத்தில், அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் மலாய்காரர்களை மட்டுமில்லாமல் நாட்டின் 32 மில்லியன் பொது மக்களையும் சேர்த்து வஞ்சித்து வருகிறது. பல்வேறு வரிகளை மக்களின் மீது சுமத்தியது மட்டுமில்லாமல் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் லஞ்ச ஊழல் நெருக்கடிகளால் நிலைகுலைந்து உள்ளது.

1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்  (1எம்டிபி) ஊழல், பெல்டா நிறுவனத்தின் நிர்வாகக் கோளாறுகள், தாபோங் ஹாஜி பங்கு வர்த்தகம், சேமநிதி வாரியத்தின் தவறான முதலீடுகள், ஜோகூரில் பூமிபுத்ரா சொத்துடமை ஊழல், மாரா சொத்துடமை வர்த்தகத்தில் மோசடிகள் மலேசியா இஸ்லாமிய பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் நிதி மோசடி என ஊழல்களை இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் நாம் கூர்ந்து கவனித்தால் மலேசியா நாட்டின் அனைத்து அரசாங்க சார்ந்த நிறுவனங்களின் நிதி நிர்வாக மோசடிகள் அல்லது கோளாறுக்கு காரணகர்தாவாக இருந்து வருவது நஜிப் ரசாக் தலைமையிலான அம்னோ தேசிய முன்னணியே, மாறாக ஜனநாயக செயல் கட்சியோ (டிஏபி) அல்லது கெஅடிலான் கட்சியோ அல்லது மகாதீரின் பெர்சத்து கட்சியோ அல்ல.

கல்லை எரிந்து விட்டு, கையை பின்னால் ஒளித்து வைத்துக் கொள்வது அம்னோ தேசிய முன்னணியின் வாழ்வியல் இலக்கணம். அம்னோ ஆதிக்கம் செலுத்தி வரும் அரசாங்க தகவல் ஊடகங்களான ஆர்டிஎம், டிவி3, உத்துசான் மலேசியா, பெரித்தா ஹாரியான், தி ஸ்தார், நியூ ஸ்தேரேட் டைம்ஸ் பொய் மூட்டைகளை தினந்தோறும் கொட்டி மகிழும் தகவல் களஞ்சியங்களாக திகழ்கின்றன என்றால் மிகையாகாது.

 

NAJIB-1MDB

 

 

 

 

   நஜிப் ரசாக் 14-வது பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடும் என்று பயந்து நடுங்க ஆரம்பித்து விட்டார். நாட்டின் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஆட்சி மாற்றம் மக்களாட்சி தத்துவத்தின் முக்கிய கூறு என்பதை மறந்து விட்டார் நஜிப் ரசாக். அப்படி என்றால் நஜிப் ரசாக் நாட்டின் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் உரிமையை மறுக்கிறாரா?

   நஜிப் ரசாக் தைரியத்துடனும் வெளிப்படையாகவும்  அம்னோ தேசிய முன்னணி ‘அச்சுறுத்தும் அரசியல்’ நடத்தவில்லை என்று மார்தட்டிக் கொண்டு சொல்லட்டும். ஜனநாயக நாட்டில் தகவல் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் படவேண்டும். ஆனாலும் மலேசியா திருநாட்டில் தகவல் ஊடகங்கள் அம்னோ தேசிய முன்னணி குடும்ப உறுப்பினர்களின் சொத்துடமைகளாக இருந்து வருகிறது. தகவல் ஊடகங்களை கொண்டு அச்சுறுத்தும் வாசகங்களை இன்னமும் பயன்படுத்தி குறிப்பாக கிராமப்புற மக்களை பயமுறுத்தியே நாட்டை நிர்வகிக்கித்து வருகிறது என்றால் மிகையாகாது. கிராமத்து மக்கள் இன்னும் மாற்று தகவல் ஊடகங்களை அணுகவில்லை என்றே தோன்றுகிறது.

    மலேசியா ஒரு ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் நஜிப் ரசாக் தைரியத்துடன் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி மற்றும் மாற்று தகவல் ஊடகங்கள், நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் அடிப்படையில் விவாதங்கள் புரிய புதிய தளத்தை ஏற்படுத்த வேண்டும். அதில் இரண்டு தரப்பினரும் விவாதங்களை பொது மக்கள் செவிமடுத்து உண்மையை முடிவு செய்யட்டும்.

சிந்தனை வளம் கொண்ட மக்களை கொண்ட நாடு மலேசியா, ஆகவே முதிர்ச்சியான அரசியல் சித்தாந்தங்களைத் தொட்டு களம் காண வேண்டும். எதிர்மறையான கருத்துகளை அடிப்படையில் பொது மக்களை அச்சுறுத்தும் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டு மாற்றத்திற்கு வித்திடும் நேரம் கனிந்து விட்டது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஆனால், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களே, அம்னோ தேசிய முன்னணி அச்சுறுத்தும் மற்றும் மக்களை முட்டாள்களாக்கும் அரசியல் சித்தாந்தங்களை விட்டு, சுதந்திரமான தகவல் பரிமாற்றத்தை நடைமுறையில் கொண்டு செயல்படுவார்களா என்ற கேள்வி கணையை தொடுத்துள்ளார்கள்.

அம்னோ தேசிய முன்னணி கட்சி உண்மையில் ஒரு கோழைத்தனமான கட்சி, அஃது ‘கிராமத்து ஹீரோ’ என்றே அழைக்கப்படுகிறது. பொய் தோற்றத்தை ஏற்படுத்தி வருவதில் அம்னோவிற்கு நிகர் அம்னோவே. எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் தேசத்தை காப்பாற்ற அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்த வேண்டும். அம்னோ தேசிய முன்னணி மேலும் நாட்டை கொள்ளையடித்து செல்வதை நிறுத்த மாற்றுக் கூட்டணியான மக்கள் போற்றும் மறுமலர்ச்சி தந்தை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் தேசத்தின் முன்னேற்றத் தந்தை துன் மகாதீர் முகமட் தலைமைத்துவத்தில் செயல்படும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை தேர்ந்தெடுக்க பொது மக்கள் தயாராக வேண்டும், இஃது காலத்தின் கட்டாயம்.

அமீனுடின் ஹாரூன்

சிக்காமாட் சட்ட மன்ற உறுப்பினர்

# தமிழாக்கம் கு.குணசேகரன்


Pengarang :