NATIONAL

டத்தோ சரவணனை நீக்க, நஜீப்பீடம் கோரிக்கை 

கோலா லம்பூர், செப்டம்பர் 5:

தமிழ் மலர் பத்திரிகை தலைமையகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோ சரவணனை அமைச்சரவையிலிருந்து நீக்கும்படி ம.இ.காவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் ஏ.கே ராமலிங்கம் நஜீப்பிடம் கோரிக்கை விடுத்தார்.
தமிழ் மலர் பத்திரிகை உரிமையாளர் ஓம்ஸ் தியாகராஜன் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்பு படுத்தப்பட்டிருக்கும் டத்தோ சரவணனை அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும் என்று ராமலிங்கம் கோரிக்கை விடுத்தார்.

இதுபோன்ற தாக்குதலில் சரவணனை சம்பந்தப்படுத்துவது புதிதல்ல. ஊடகத்துக்கு எதிராகத் தொடுக்கப்படும் தாக்குதல் மன்னிக்க முடியாதது. இது வரம்பை மீறிய செயல் என்று ராமா தெரிவித்தார்.
” அமைச்சரவையிலிருந்து சரவணனை நீக்குமாறு மக்கள் சார்பில் பிரதமரைக் கேட்டுக் கொள்கிறோம். விமர்சனம் செய்பவர்களைத் தாக்குபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று ராமலிங்கம் பெரிதா டெய்லியிடம் தெரிவித்தார்.
ஏறக்குறைய 100 பேருடன் தமிழ் மலர் அலுவலகத்துக்குள் நுழைந்த சரவணனின் ஆட்கள் குண்டர்கள் என்று நம்பப்படுவதாக ராமா கூறினார். காலை 11 மணிக்கு, கோலாலம்பூர் ஜலான் ஈப்போவில் உள்ள தமிழ் மலர் அலுவலகத்தில் நுழைந்த இவர்களுடன் நடந்த வாக்கு வாதம் கைகலப்பில் முடிந்துள்ளது. பத்திரிகை தலைமை ஆசிரியர் சரஸ்வதி கந்தசாமியைத் தாக்கிய குண்டர்கள் மற்றுமொரு நிருபரையும் தாக்கியதாகக் கூறப்பட்டது. தாக்கப்பட்ட ஓம்சும், சரஸ்வதியும் சிகிச்சையில் இருப்பதால் நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்றார் ராமலிங்கம்.
பத்திரிகை அலுவலகத்தில் வன்முறையைப் பிரயோகித்தவர்கள் மேல் புதிய போலீஸ் படைத் தலைவர் முஹமட்ஃபூசி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.இ.கா முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் கே.பி.சாமி கேட்டுக் கொண்டதோடு இது போலீஸ் படைத்த தலைவருக்குப் புதிய பரீட்சையாக இருக்கும் என்று அவர் வருணித்தார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ம.இ.கா உறுப்பினர்களா அல்லது வேறு வகையைச் சேர்ந்தவர்களா என்பதை தெளிவு படுத்த முடியுமா என்று ம.இ.கா முன்னாள் தகவல் பிரிவு அதிகாரி எல்.சுப்பிரமணியம் டாக்டர் சுப்ராவுக்கு சவால் விடுவதாகக் கூறினார்.

” வந்தவர்கள் ம.இ.கா சின்னம் கொண்ட உடையை அணிந்திருந்தனர்.இவர்கள் ம.இ.காவினரா? அல்லது ம.இ.காவின் கூலிப்படைகளா? என்று சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.

#கு.குணசேகரன் குப்பன்


Pengarang :