NATIONAL

தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் நினைவுநாள் இன்று

1953 – 64 ஆண்டுகளுக்கு முன் வியாழக்கிழமை (பிறப்பு: 1883)

தமிழறிஞர், மேடைப் பேச்சாளர், தமிழ்மொழிக் காவலர், நூலாசிரியர், (56 நூல்கள் எழுதியவர்) ஆசிரியர், இதழாசிரியர், பொதுத்தொண்டர், குமுகப் பகுத்தறிவாளி, தொழிற்சங்கவாளி, மாந்தநேயர்.

திரு.வி.க. பற்றிக் கல்கி எழுதியதை நினைவுகூர்வோம்.

”தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர் குலத்துக்கும் தந்தையாக இருந்தார்; தொழிலாளர் குலத்துக்குத் தாயாகி விளங்கினார்; எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகிய திறத்தினால் அந்தணர் திலகமாகத் திகழ்ந்தார்; ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற திருவாக்கை வாழ்க்கையில் கடைப்பிடித்து நடந்தார்; தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தார்; அன்பே சிவம் என்ற உண்மையில் வாழ்க்கை எல்லாம் திளைத்திருந்தார். இன்று அன்பிலும் சிவத்திலும் இரண்டறக் கலந்துவிட்டார்.

பா மூலமாகப் பாரதியார் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் செய்த அரும்பணியைத் திரு.வி.க. தமிழ் உரையாட்டு நடைமூலமாகச் செய்தார்; எழுத்தினாலும் பேச்சினாலும் அத் திருப்பணியை அவர் ஆற்றினார். இனிய எளிய செந்தமிழ்ச் சொற்களைக் கொண்டும் அதிக நீளமில்லாத சிறிய சொற்றொடர்களைக் கொண்டும் திரு.வி.க. நிகழ்த்திய சொற்பொழிவுகள், மெத்தப் படித்த அறிவாளிகளையும் ஏட்டுக் கல்வியே பயிலாத தொழிலாளிகளையும் ஒரே சமயத்தில் கவர்ந்து மெய்ம் மறந்து கேட்டுக் கொண்டிருக்கும்படி செய்தன.”
– _அறிவன்_

தகவல்: தமிழ் முத்துக்கள் புலனம்


Pengarang :