NATIONAL

தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம்…

கோலா லம்பூர், செப்டம்பர் 20:

இங்கே 46 தமிழ்ப்பள்ளிகளுக்கு டி.எல்.பி. என்று சொல்லி கணிதம், அறிவியல், ஆங்கில மொழிப் பாடங்களுக்கு ஆப்பு அடித்துவிட்டு… கமல நாரதரரும் சுப்பிரமணியரும் தமிழகம் சென்று தமிழக முதல்வரிடம் *மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வி* என்று சொல்லி வடை சுட்டு ஊட்டி விட்டு வந்து இருக்கிறார்கள்.

அங்கே இருக்கும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பலருக்கும் தமிழ்ப் பற்று இல்லை. தெரிந்த விசயம். இதில் அங்கு போய் வடை சுட்டு வந்து இருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட சாதனை. வெட்கம். தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கில மொழி நேரத்தை கூட்டி வாங்க இங்கே வக்கில்லை. ஆனால் பெரிய பேச்சில் மட்டும் குறைச்சல் இல்லை. கணிதம், அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்க வேண்டிய அவசியமே இல்லை.

கடந்த 200 ஆண்டுகள் தமிழ்ப் பள்ளிகளின் தனித்தமிழ் தொன்மையைக் கெடுத்து வரும் இதர மொழி வெறியர்கள் போடும் கழிசல்களில் இவர்களும் சேர்ந்து குளிர் காய்வது பெரிய வெட்கக்கேடு. இது மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் ஒரு மோசமான சாபக்கேடு.

இந்த இருவரும் மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்ப்பள்ளிகள் பற்றி பெருமை பேச தகுதியற்றவர்கள். தமிழ் மொழியின் உரிமையை அடைமானம் வைத்து வயிறு பிழைக்கப் பாதை போட்ட இவர்களைத் தமிழ்த் தாய் பழி வாங்காமல் சும்மா விட மாட்டாள்.

ம.இ.கா. 71-வது மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி நடக்கிறது. தமிழ் பொறுப்புமிகு பேராளர்களே! இவர்கள் நடத்தும் தமிழ் மொழித் துரோகத்திற்கு எதிர்ப்புக் கொடுத்து தமிழ் மொழியைப் பாதுகாக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் தராவிட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர்ச் சமூகம் அவர்களுக்குப் பாடம் போதிக்கும்.

தமிழ் படிக்க எழுதத் தெரியாத எந்த ஒரு வேட்பாளரையும் தமிழர்ச் சமூகம் நிராகரிக்க வேண்டும். தமிழுக்கு முக்கியம் தராவிட்டால் தமிழ் இனத்துக்கு எவரும் மரியாதை தரப்போவது இல்லை. அதுதான் அரசியல் உண்மை!

நீ தமிழுக்குக் காவல் தந்தால் உன் தலைமுறை உன்னை வாழ்த்தும். இல்லையேல் உனக்கு தலை குனிவு ஏற்படும். தமிழர் இனத்துக்கு தலைவராக இருக்க தகுதியற்றவர் பட்டியலில் இடம் பெற வேண்டி வரும்.

அன்புடன் தமிழவன்
கோலாலம்பூர்
20/9/2017


Pengarang :