NATIONAL

வேதமூர்த்தியை ஹராப்பான் கூட்டணி புறக்கணிக்க வேண்டும்

கோலாலம்பூர், செப்டம்பர் 28:

இந்திய சமுதாயத்தின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து விட்ட வேதமூர்த்தியோடு ஹராப்பான் கூட்டணி எவ்வித உடன்பாட்டையும் காண கூடாது என ஹிண்ட்ஃராப் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அடித்தட்டு மக்கள் மட்டும் இந்தியர்களின் நம்பிக்கையை இழந்த வேதமூர்த்தியோடு கைகோர்ப்பது ஹராப்பான் கூட்டணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என எச்சரித்த அவர்கள் வேதமூர்த்தியை ஹராப்பான் கூட்டணி புறக்கணிக்க வேண்டும் என நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்.ஜெயதாஸ் தெரிவித்தார்.

அதேவேளையில், வேதமூர்த்தி அன்மையில் தமக்கும் தன்னை சார்ந்த குழுவிற்கும் இந்தியர்களின் ஆதரவும் நம்பிக்கையும் வலுவாக இருப்பதாக வேதமூர்த்தி கூறியிருப்பது அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய ஜெயதாஸ் இது தொடர்பில் ஹராப்பான் கூட்டணியின் தலைமைத்துவத்தை சந்திக்கவும் ஆயத்தமாகி வருவதாகவும் கூறினார்.

ஹிண்ட்ஃராப் போராட்டத்திற்கு பின்னர் லண்டனில் வசித்து வந்த வேதமூர்த்தி 2012இல் நாடு திரும்பியதை நினைவுக்கூர்ந்த ஜெயதாஸ், வேதமூர்த்தி நாட்டின் 13வது தேர்தலில் தேசிய முன்னணியோடு உடன்பாடு ஒப்பந்தம் செய்தது பெரும் அதிர்ப்தியினை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தியதையும் சுட்டிக்காண்பித்தார்.

தேசிய முன்னணியோடு வேதமூர்த்தி செய்துக் கொண்ட உடன்பாடு புரிந்துணர்வு இந்தியர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வேதமூர்த்தி மற்றும் அவர் சார்ந்த ஹிண்ட்ஃராப் அணியின் மீது இழக்க செய்து விட்டது என்றும் தெளிவுப்படுத்தினார்.
கடந்த மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற கலந்தாய்வு ஒன்றில் தேசிய முன்னணியை ஆதரித்ததில் இந்தியர்களின் நம்பிக்கையை ஹிண்ட்ஃராப் இழந்து விட்டதாகவும் வேதமூர்த்தி ஒப்புக்கொண்டதையும் ஜெயதாஸ் நினைவுக்கூர்ந்தார்.

இந்நிலையில் ஹிண்ட்ஃராப் கூட்டணியோடு கைகோர்த்து இந்தியர்களின் வாழ்வாதாரத்தை மாற்றப்போவதாக வேதமூர்த்தி கூறுவது அவரது நிலைப்பாட்டில் ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் கூறிய ஜெயதாஸ் வேதமூர்த்தியை நம்பி ஹராப்பான் கூட்டணி இந்திய சமுதாயத்தின் ஆதரவை இழந்து விடக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

#ரௌத்திரன்


Pengarang :