SELANGOR

கிள்ளான் லிட்டில் இந்தியாவில் சிலாங்கூர் மாநில தீபாவளி விருந்துபசரிப்பு

கிள்ளான், அக்டோபர் 15:

மலேசியாவில் அதிக இந்தியர்கள் வாழும் நகரமான கிள்ளான் அரச நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ‘லிட்டில் இந்தியாவில்’ சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். மாநில தோட்டத் தொழிலாளர், வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க அரசாங்கம் ஆகிய நிரந்தர குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5000-க்கும் அதிகமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

மாநில மந்திரி பெசாரோடு மலேசியா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாந்தியாகோ, ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார், கிள்ளான் நகராண்மை கழகத்தின் தலைவர் டத்தோ யாஸிட் பிடின் மற்றும் சிலாங்கூர் மாநில மாநகராட்சி, நகராண்மை மற்றும் மாவட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் சிலாங்கூர் மாநில இந்திய கிராமத்துத் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அஸ்மின் அலி கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது தாம் எல்லா இன மக்களுக்கும் சேவையாற்றும் மந்திரி பெசார் என்று இந்திய சமுதாயத்திற்கு உறுதி அளித்தார். அம்னோ தேசிய முன்னணியின் 60 ஆண்டுகளில் அமல்படுத்திய இனரீதியிலான  ஆட்சி வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று உறுதியாக நம்புவதாக கூறினார். இந்தியர்கள் இரண்டாம் தர குடிமக்கள் அல்ல என்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று கூறிய போது மக்கள் பலத்த கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர்.

#கெஜிஎஸ்


Pengarang :