SELANGOR

திறன்மிக்க பெண்ணியல் கல்லூரி தொழில்துறை புரட்சிக்கு வித்திடும்

ஷா ஆலாம், அக்டோபர் 10;

திறன் மிக்க பெண்ணியல் கல்லூரி தொழில்துறை புரட்சிக்கு வித்திடும் என பெருமிதமாக கூறிய சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தொழில்துறை வளர்ச்சி நான்காவது கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அதனை எதிர்க்கொள்ளும் ஆற்றலையும் திறனையும் பெண்கள் கொண்டிருக்க வேண்டும்.அத்தகைய ஆற்றல் மிக்க பெண்களை உருவாக்கும் அரணாக திறன் மிக்க பெண்ணியல் கல்லூரி (IWB) விளங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இன்றைய நவீனத்துவ தொழில்துறை வளர்ச்சியில் தொழில்துறைகளை ரோபாட்டிக்ஸ் மற்றும் இணையம் வாயிலான சிந்தனைகளும் ஆட்கொண்டிருக்கும் நிலையில் அதுசார்ந்த துறைகளில் பெண்கள் வேலை இழக்கும் அபாயத்தை எட்டுகிறார்கள்.காலத்திற்கு ஏற்ற திறன் மிக்க ஆற்றலையும் சிந்தனையும் அதேவேளையில் கற்றலையும் பெண்கள் ஆளுமை செலுத்த தவறினால் தொடர்ந்து அவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும் மந்திரி பெசார் எச்சரித்தார்.
இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தொடர்ந்து தொழில்துறையில் பெண்களின் ஆளுமையும் ஆற்றலும் தொடர திறன் மிக்க பெண்ணியல் கல்லூரி பெரும் பங்காற்றும் என்பதில் துளியும் ஐயமில்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.அத்துறைகளில் பெண்களின் ஆற்றல் அதிகரித்தால் அவர்களின் பங்களிப்புத்துவம் பெருமிதம் கொள்ளும் நிலையை எட்டுவதோடு வேலை இழப்பிற்கும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்றார்.
பெண்களின் ஆற்றலை மேம்படுத்தவும் தொடர்ந்து விரிவாக்கப்படுத்தவும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஆக்கபூர்வமாக சிந்தித்து வருவதாகவும் அவர்களை தொழில்முனைவர்களாக உருவாக்கவும் அதேவேளையில் அவர்களுக்கு தொழில்முறை பயிற்சியினை வழங்கிடவும் களமிறங்கியுள்ளதாகவும் கூறினார்.
மேலும்,விளையாட்டு,கலை,அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் பெண்களின் திறனை மேம்படுத்துவதோடு திறன்மிக்க பெண்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் அதேவேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் தொழில்முனைவர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்கி பொருளாதார மேம்பாட்டிற்கு கருவூலமாக பெண்களை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு என்றும் தெரிவித்தார்.
பெண்களை ஓரங்கட்டி விட்டு சிலாங்கூர் மாநிலம் விவேகமான மாநிலம் எனும் நிலையினை எட்ட முடியாது என்றும் நினைவுறுத்திய மந்திரி பெசார் பெண்களின் பங்களிப்புத்துவம் மிகவும் அவசியமானது என்றார்.ஒரு ஆணின் கல்வி மேம்பாட்டிற்கும் ஒரு பெண்ணின் கல்வி மேம்பாட்டிற்கும் பெரும் வித்தியாசம் இருப்பதை சுட்டிக்காண்பித்த டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ஒரு ஆணின் கல்வி ஒருவருக்கு மட்டுமே கற்பிக்கும் நிலைக்கு உகர்ந்த நிலையில் ஒரு பெண் கற்றால் அஃது ஒரு குடும்பத்தின் மேம்பாட்டின் சான்றும் என்றும் அவர் கூறினார்.
வருங்காலங்களில் சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சியும் மேம்பாடும் பெண்களின் ஆற்றல் மிக்க சிந்தனையிலும் அவர்களின் திறன் மிக்க செயல்பாடுகளாலும் தான் அடங்கியுள்ளது என்றும் திறன் மிக்க பெண்ணியல் கல்லூரியின் தொடக்கவிழாவினை ஷா ஆலாம் பல்நோக்கு மண்டபத்தில் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் மந்திரி பெசார் இதனை நினைவுறுத்தினார்.
நடைபெற்ற நிகழ்வில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியோடு மாநில சமூகநலன் மற்றும் மகளிர்,குடும்ப மேம்பாடுதுறை ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் டரோயா ஹல்வி மற்றும் காஜாங் சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயிலும் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில்,இந்நிகழ்விற்கு அதிகமான இந்திய பெண்கள் வருகை அளித்திருப்பது பெருமையாக இருப்பதாக கூறிய கிள்ளான்,சுங்கை பெர்த்தே உத்தாராவை சார்ந்த கிராமத்து தலைவர் திருமதி.கண்மணி லெட்சுமணன் இந்திய பெண்கள் நாட்டின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியிலிருந்து விடுப்படாமல் இருக்க இஃது பெரும் உதவியாக இருப்பதாக கூறினார்.மேலும்,நடப்பு விவகாரங்களை அறிந்துக் கொள்வதோடு இன்றைய சூழலுக்கும் நாளைய நகர்வுகளுக்கும் ஏற்ற நிலையில் பெண்கள் தங்களை உருமாற்றம் செய்துக் கொள்ள இவை பெரிதும் அவசியமாகிறது என்றார்.
மேலும்,மக்களின் நலனுக்காக சிலாங்கூர் மாநில அரசாங்கம் மேற்கொண்டு வரும் சமூகநல திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் அரும்பணியினை செம்மையாகவும் அதேவேளையில் அத்திட்டத்திற்கு உயிர்க் கொடுக்கும் உன்னதத்தையும் தாம் சிறந்த முறையில் மேற்கொண்டு வருவதாகவும் கூறிய அவர் பெண்களுக்கான வாய்ப்புகள் இங்கு அதிகமாகவே இருப்பதாகவும் அதனை நன் முறையில் நம்மின பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மாநில அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்கள் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியினை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஒவ்வொருவரின் கடமை என்றும் கூறிய கண்மணி அதனை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் இந்திய சமுதாயம் அத்திட்டங்களின் மூலம் நன்மை அடைவதை நாம் உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
அவ்வகையில்,மாநில அரசாங்கத்தின் ஒவ்வொரு சமூகநலத் திட்டங்களும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியினை ஆக்கப்பூர்வமாக தாம் மேற்கொண்டு வருவதாகவும் கூறிய அவர் அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட சுகாதார அட்டை (பெடுலி சிஹாட்) திட்டத்தில் நம்மவர்களை அதிகமாய் பதிந்தும் வருவதாக கூறினார்.மருத்துவத்திற்கான செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசாங்கத்தின் இத்திட்டம் காலத்திற்கு ஏற்ற சிந்தனை என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் திட்டங்களையும் இந்திய சமுதாயத்திடம் கொண்டு செல்லும் ஆக்கப்பூர்வ பங்களிப்பினை பெண்களால்தான் வழங்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்த கண்மணி பெண்கள் வீட்டை மட்டும் கவனித்தால் போதாது.மாறாய்,நாட்டையும் பார்க்க வேண்டும்.அதேவேளையில் பெண்களின் முன்னேற்றத்திற்கும் சிலாங்கூர் மாநில பொருளாதார மேம்பாட்டிற்கும் பெண்களின் பங்களிப்பும் திறன் மிக்க ஆற்றலும் மிகவும் அவசியம் என்றும் கண்மணி நினைவுறுத்தினார்.
காலத்திற்கு ஏற்ற சிந்தனையை மாற்றமும் திறன் மிக்க ஆற்றலும் பெண்களிடமும் வலுபெற வேண்டும் என்றும் உயரிய சிந்தனையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் இத்திட்டத்தினை இந்திய பெண்கள் நன்முறையில் பயன்படுத்தி உலக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கு ஈடான இலக்கினை எட்ட வேண்டும் என்றும் அவர் இந்நிகழ்விற்கு பின்னர் அது குறித்து கருத்துரைக்கையில் இவ்வாறு கூறினார்.
பெண்களின் மேபாடும் வளர்ச்சியும் சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டின் கருவூலமாக அமையும் என்பதில் துளியும் ஐயமில்லை எனும் சிலாங்கூர் மந்திரி பெசாரின் சிந்தனையை சிலாங்கூர் மாநில வாழ் இந்திய பெண்கள் உணர்ந்து அச்சிந்தனையோடு கைகோர்த்து பயணிக்க வேண்டும் என்பதே விவேகமான செயல்பாடாக இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.


Pengarang :