SELANGOR

பூச்சோங் தொழில் முனைவர்கள் தன்னாளுமை திட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

பூச்சோங், அக்டோபர் 11:

இந்தியர்களை தொழில் முனைவர்களாகவும் வர்த்தக ரீதியில் அவர்களின் வாழ்வாதாரத்தை சிறந்த இலக்கிற்கும் கொண்டு செல்ல டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையிலான மாநில அரசாங்கம் உருவாக்கியிருக்கும் தொழில் முனைவர் தன்னாளுமை திட்டத்தில் இந்தியர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.

மாநில பட்ஜெட்டின் போது 2017ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய தொழில்முனைவர்களை உருவாக்கமும் பொருளாதார ரீதியில் இந்திய சமுதாயத்தை மேம்படுத்தவும் மாநில அரசாங்கம் 1 மில்லியன் ரிங்கிட்டை ஒதுகீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஒதுக்கீடு பிரத்தியோகமாக இந்திய சமுதாயத்திற்கானது.இதனை சிலாங்கூர் வாழ் இந்தியர்கள் நன் முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
மாநில அரசாங்கத்தின் நோக்கம் அதன் இலக்கை எட்டும் வகையில் பூச்சோங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பூமாலை கட்டும் பயிற்சியினை நிறைவு செய்து வைத்த மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகோ இந்தியர்கள் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு சிறுத்தொழில் செயல்பாடுகள் பெரும் பங்காற்றும் என்றும் அவர் கூறினார்.

பூமாலை கட்டும் பயிற்சியினை முடித்தவர்கள்,அதனை தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வியபார ரீதியில் முன்னெடுக்கும் போது சிலாங்கூர் மாநில அரசாங்கம் உருவாக்கியிருக்கும் இந்த 1 மில்லியன் தொழில் முனைவர் தன்னாளுமை திட்டம் கைகொடுக்கும் என்றும் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்தியர்களின் வறுமையை ஒழிக்கவும்,தனித்து வாழும் அன்னையர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வித்திடவும் மட்டுமின்றி இந்திய சமுதாயத்தை பொருளாதார ரீதியில் அடுத்தக்கட்ட முன்நகர்விற்கு கொண்டு செல்ல வேண்டும் எனும் உயரிய சிந்தனையோடு மாநில அரசாங்கம் இத்திட்டத்தை வரையறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தகது.

பெரும் தொழில் முனைவர்களாக உயிர்ப்பிக்கும் முன்னர் நாம் சிறு- சிறுத்தொழில்கள் மூலம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.அதற்கு வித்திடும் வகையில் மாநில அரசாங்கத்தின் இத்திட்டத்தின் கீழ் சிறு – சிறு பயிற்சிகளை வழங்கி அதன் மூலம் தொழில் முனைவர்களை உருவாக்கும் நிலையை விவேகமாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய சமுதாயம் கைத்தொழிலில் ஆளுமைக் கொண்டிருந்தாலும் அவர்கள் அத்தொழிலில் மேம்பாடு காணவும் அதனை விரிவாக்கம் செய்தும் பொருளாதார ரீதியில் முன்னெடுக்க போதிய பொருளாதார முதலீடு இல்லாமல் தத்தளிக்கிறார்கள்.அதனை ஈடுக்கட்டவே சிலாங்கூர் மாநில அரசாங்கம் இத்திட்டத்தை நன்கு ஆராய்ந்து முன்னெடுத்துள்ளது என்பது பெருமிதமானது.

பூச்சோங்கில் பூமாலை கட்டும் பயிற்சியினை மேற்கொண்டுள்ள நிலையில் கிள்ளானில் புகைப்பட பயிற்சியும்,வடிமைப்பு பயிற்சியும் வழங்கப்பட்டு வரும் நிலையில் காப்பாரில் விரைவில் முகஒப்பனை பயிற்சியும் வழங்கிய திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக சிலாங்கூர் மாநில அரசாங்கம் உருவாக்கியிருக்கும் இத்திட்டத்தில் இந்தியர்கள் தங்களின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்.வாய்ப்பு நம் கண் முன் இருக்கிறது.அதனை பயன்படுத்த நாம் முயல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இத்திட்டத்தின் கீழ் இந்தியர்கள் ஆளுமைக் கொண்டால் சிலாங்கூரில் பொருளாதார ரீதியில் இந்தியர்கள் தங்களின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதோடு நம்மிடையே தொழில்முனைவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க செய்யும் என்றார்.இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டில் அக்கறைக் கொண்டு இத்திட்டத்தை உருவாக்கியதோடு அதற்காக பட்ஜெட்டையும் ஒதுக்கீடு செய்த மந்திரி பெசாருக்கு இந்திய சமுதாயம் நன்றி கூறதான் வேண்டும் என்றார்.பூச்சோங்கில் நடைபெற்ற பூமாலை கட்டும் பயிற்சியினை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சார்ல்ஸ் சந்தியாகோவுடன் கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஏங் ஷி ஹான் அவர்களும் உடன் இருந்தார்.

#ரௌத்திரன்


Pengarang :