SELANGOR

எதிர் வரும் பொதுத் தேர்தலில் சிலாங்கூரை தேமு ஒருபோதும் கைப்பற்ற முடியாது!

ஷா ஆலம், நவம்பர் 29:

விரைவில் எதிர்ப்பார்க்கப்படும்  14-வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்ற எண்ணம் கொண்டுள்ள தேசிய முன்னணியின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் கூறினார்.

தற்போது எதிர்கட்சி வசமுள்ள சிலாங்கூர் மாநிலத்தை வரும் 14-வது பொதுத் தேர்தலில் கைப்பற்ற முடியாது. சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றுவதற்கு தேசிய முன்னணி என்ன சதி திட்டம் தீட்டினாலும் அது பயனளிக்காது. சிலாங்கூர் மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணியை தேசிய முன்னணியால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.

மலேசியாவிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலமாக விளங்கும் சிலாங்கூரில் வறுமையை ஒழித்து மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் மாநில அரசின் முன்னுரிமை என்ற கொள்கையோடு செயல்பட்டு வீறு நடைப்போட்டு வருகின்றது என்றார் வீ.கணபதி ராவ்.

தொடர்ந்து அவர் பேசுகையில், சிலாங்கூர் வாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசாங்கம் ஆக்கப்பூர்வமான சேவைகளை வழங்கி வருவதோடு வறுமையை முற்றிலுமாக துடைத்தொழித்து, ஆரோக்கியமான வாழ்க்கை, கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் மாநில அரசாங்கம் பல மக்கள் நலன் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

குறிப்பாக, சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் மாநிலத்தின் 2018-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம 5 மில்லியன் மாநில அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. மத, இன பாகுபாடின்றி ஆலயங்களின் செயல்பாடுகளுக்கும் அதன் வளர்ச்சிக்கும் ரிம17 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய சிறுதொழில் முனைவர் திட்டத்திற்கு ரிம 3 மில்லியன், தோட்டப்பாட்டாளிகளுக்கு ரிம 5 லட்சம் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம் ரிம 1.3 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சீக்கிய சமுதாயத்திற்கு மேலும் ரிம 1 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது என்றார் கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினருமான கணபதி ராவ்.

சிலாங்கூர் மக்கள் நலன் திட்டங்களில் மருத்துவ செலவினத்தை குறைப்பதற்காக பரிவுமிக்க திட்டங்களில் ஒன்றான பெடுலி சிஹாட் எனும் மருத்துவ அட்டை திட்டத்தில் ரிம 500-யை ஒதுக்கீடு செய்திருந்த வேளையில், வரும் 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரிம200-யை அதிகரித்து அத்தொகையை ரிம 700-ஆக மாநில அரசு உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறுகையில், நிர்ணயம் இல்லாத எரிவாயு விலை, ரிங்கிட் மதிப்பின் வீழ்ச்சி, மக்களின் வாழ்வாதார செலவினங்களின் சுமை அதிகரித்து வருகின்றது. மற்ற மாநிலங்களைவிட சிலாங்கூர் மாநிலத்திலுள்ள மக்கள் பல்வேறு விவகாரங்களில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீது பெரும் அதிருப்தி கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்க்கட்சி கூட்டணியின் வசமுள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கம் இப்போது மிகவும் சிறப்பான முறையில் தனது ஆட்சியை வழிநடத்தி வருவதால் இம்மாநிலத்தை தேசிய முன்னணி ஒருபோதும் கைப்பற்றுவது சாத்தியமல்ல என்றும் அவர் சூளுரைத்தார்.

வாக்காளர்களைப் பதிவு செய்வதிலும் தேர்தல் எல்லை மறுசீரமைப்பு செய்வதிலும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் குளறுபடிகளை நாட்டு மக்கள் நன்கு அறிவர். அதுமட்டுமின்றி, சிலாங்கூர் மாநிலத்தில் ஆவி வாக்காளர்கள் உள்ளதால் விரைவில் நடைபெறவுள்ள 14-வது பொதுத் தேர்தலில் ‘ஜனநாயக மோசடி’ நிகழ்த்தப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :