NATIONAL

கெடா வரலாறு – பாகம்: 3

 

கெடா மன்னராட்சியை உருவாக்கிய மாறன் மகாவம்சன். பாண்டியர்கள் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். கெடா பேரரசு தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் கெடா நிலப் பகுதி லங்காசுகம் (Langkasuka) என்று அழைக்கப் பட்டது.

மாறன் மகாவம்சனுக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவர் மாறன் மகா பூதிசன் (Merong Mahapudisat). இரண்டாவது மகன் கஞ்சில் சார்ஜுனா (Ganjil Sarjuna). மூன்றாவது மகன் ஸ்ரீ மகாவங்சன் (Seri Mahawangsa). கடைசியாக ஒரே மகள். அவருடைய பெயர் ராஜா புத்திரி இந்திரவம்சன் (Raja Puteri Sri Indrawangsa)

மாறன் மகாவம்சனுக்குப் பிறகு அவருடைய மகன் மாறன் மகா பூதிசன் கெடாவின் அரசரானார். இவருக்குப் பிறகு இவரின் தம்பி கஞ்சில் சார்ஜுனா கெடாவின் அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் தான் லங்காசுகத்தைத் தோற்றுவித்தவர். கஞ்சில் சார்ஜுனா இறந்த பின்னர் அவரின் தம்பி ஸ்ரீ மகாவங்சன், லங்காசுகத்தின் அரசரானார்.

ஸ்ரீ மகாவங்சனுக்குப் பின்னர் இவரின் தங்கை ராஜா புத்திரி இந்திரவம்சன் என்பவர் லங்காசுகத்தின் அரசியானார்.

கெடாவிற்கும் தென் தாய்லாந்திற்கும் இடைப்பட்ட நிலப் பகுதியைப் பட்டாணி என்று அழைத்தார்கள். பட்டாணி எனும் பெயரில் இருந்து தான் சுங்கை பட்டாணி எனும் இப்போதைய நகரத்தின் பெயரும் உருவானது.

இந்தப் பட்டாணி நிலப் பகுதிக்கும் ராஜா புத்திரி இந்திரவம்சன் தான் அரசியாக இருந்தார். கெடா வரலாற்றில் இவர் தான் முதல் பெண் ஆட்சியாளர். முதல் அரசி.

அடுத்து வந்தவர் ஸ்ரீ மகா இந்திரவம்சன் (Seri Maha Inderawangsa). இவர் ஸ்ரீ மகாவங்சனின் மகனாகும். இவரைத் தான் கூர்ப் பல் அரசன் (Raja Bersiong) என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. இவர் மனிதர்களின் இரத்தத்தைக் குடிப்பவர் என்றும் சொல்லப் படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.

இவருடைய வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகளினால் அரியணையில் இருந்து துரத்தப் பட்டார். இவர் ஜெராய் மலையில் அடைக்கலம் அடைந்தார். அங்கே வெகு காலம் தனிமையில் வாழ்ந்தார். இவர் ஒரு தாய்லாந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன். பெயர் பரா ஓங் மகா பூதிசன் (Phra Ong Mahapudisat).

பரா ஓங் மகா பூதிசன் ஓர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும் அந்த விசயம் அவருக்குத் தெரியாமலேயே இருந்தது. இவர் ஜெராய் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் தாயாருடன் வளர்ந்து வந்தார். இந்தக் கட்டத்தில் ஜெராய் மலையில் அடைக்கலம் போன ஸ்ரீ மகா இந்திரவம்சன் அங்கேயே காலமானார். மலையில் இருந்து கீழே இறங்கி வரவே இல்லை.

ஸ்ரீ மகாவங்சனுக்குப் பின்னர் ஓர் ஆண் வாரிசு கெடா அரியணைக்குத் தேவைப் பட்டார். ஜெராய் மலை அடிவாரத்தின் கிராமத்தில் இருந்த பரா ஓங் மகா பூதிசனைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். அவரைக் கொண்டு வந்து அவருக்கு கெடா பேரரசின் அரசப் பொறுப்பை வழங்கினார்கள்.

இந்த பரா ஓங் மகா பூதிசனுக்கும் ஒரே மகன். அவருடைய பெயர் பரா ஓங் மகாவம்சன் (Phra Ong Mahawangsa). இவர் தான் மதம் மாறியவர். தன் பெயரை முஷபர் ஷா என்று மாற்றிக் கொண்டார் என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் சொல்கின்றன.

கெடா மாநில ஆட்சியாளர்கள்
(கெடா வரலாற்றுப் பதிவேடுகள்)

1. மாறன் மகா பூதிசன்
2. கஞ்சில் சார்ஜுனா
3. ஸ்ரீ மகாவங்சன்
4. ராஜா புத்திரி
5. ஸ்ரீ மகா இந்திரவம்சன்
6. பரா ஓங் மகா பூதிசன்
7. பரா ஓங் மகாவம்சன்

சீனாவின் மிங் அரசக் கையேடுகளின் பதிவுகளின்படி கெடா பேரரசின் கடைசி இந்து அரசரின் பெயர் தர்பார் ராஜா II (Durbar Raja II). இவர் தான் மதமாற்றம் செய்து கொண்டார். மதமாற்றம் நடந்த பின்னர் 800 ஆண்டுகால கெடா மாநிலத்தின் இந்து ஆளுமை ஒரு முடிவிற்கு வந்தது என்று மிங் அரசக் கையேடுகள் சொல்கின்றன.

#மலாக்கா முத்துக்கிருஷ்ணன்


Pengarang :