Selangorkini
SELANGOR

சுபாங் ஜெயா சீப்பீல்ட் மஹா மாரியம்மன் ஆலய இடமாற்ற விவகாரம்

சீப்பீல்ட் தோட்ட மஹா மாரியம்மன் ஆலய நடவடிக்கை குழு என்ற ஒரு அரசுசாரா இயக்கம், சுபாங் ஜெயா யூ.எஸ்ஏ 25ல் உள்ள ஆலயத்தின் இடம் மாற்றம் குறித்து அதன் கவலையைத் தெரிவித்துள்ளது.

அந்த விவகாரம் குறித்துக் கடந்த 14\12\2017- ல் சிலாங்கூர் மாநில மந்திரி புசாரைப் பிரதி நிதித்து சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ ஆகிய இருவரும் முன்னாள் சீப்பீல்ட் தோட்ட மஹா மாரியம்மன் ஆலய நடவடிக்கை குழுவைப் பிரதி நிதித்து வந்த ஸ்ரீ ராமாஜி அவர்களின் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மேற்படி விவகாரத்துக்குத் தீர்வு காண முற்பட்டுள்ளது.

1. மேம்பாட்டு நிறுவனத்தின் நடவடிக்கையை எதிர்த்து ஆலயக் காபந்து குழு தலைவர் திரு. நாகராஜாவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கை இவ்வாண்டு ஜூன் மாதம் தோல்வியடைந்தது.

2. ஓன் சிட்டி மேம்பாட்டு நிறுவனம், சீப்பீல்ட் தோட்ட மஹா மாரியம்மன் ஆலயத்தைத் தற்போதுள்ள இடத்திலிருந்து இடம் மாற்றம் செய்ய அந்நிறுவனம் பெற்றுள்ள நீதி மன்ற உத்தரவை அது அமல் படுத்த தீவிரம் காட்டுவதால் தோன்றியப் பிரச்சனையைத் தீர்க்க மாநில மந்திரி புசாரின் உதவி நாடப்பட்டதாகவும், அவரின் தலையீட்டால் ஆலய இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டது.

3. இந்த ஆலயத்தின் எதிர்காலம் குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரத்திற்கு 2 பிரிவுகள் 2001ம் ஆண்டுமுதல் சர்ச்சையில் ஈடுபட்டுள்ளன. அதில் திரு. செல்லப்பாவின் தலைமையில் செயல்படும் பிரிவு 1996 ல் யூ.ஈ.பி சைம்டார்பி நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்து ஆலய நிலத்தை அப்போது தற்காத்ததாகுவும், பிறகு, ஆலயத்தை நிர்வாகம் செய்யும் திரு. நாகராஜாவின் தலைமையில் செயல்படும் ஆலயக் காபந்து குழு மீது 2001ல் வழக்கு தொடுத்து ஜூலை 2014ல் அதிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அந்தத் தீர்ப்பின் மீது நாகராஜாவின் தலைமையில் செயல்படும் ஆலயக் காபந்து குழு மேல் முறையீடு செய்யவில்லை.

4. அப்படிப்பட்ட சூழ்நிலையில் 2014ல் ஒரு கூட்டு இணக்கத்தின் பேரில் மாநில அரசின் பிரதிநிதிகள், மேம்பாட்டு நிறுவனம், ஆலயத்தைப் பிரதிநிதிக்கும் இரண்டு குழுக்கள் ஒன்று கூடிச் சில பரிந்துரைகளுக்குத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதில், கூறப்பட்டது போல ஆலயத்தின் அருகில் சுமார் பத்து ஆயிரம் அடி நிலத்திற்குக் கோவிலை இடம்மாற்றுவதை விட, புத்ரா ஹைட்சிற்கு 1 ஏக்கர் நிலத்தில் ஆலயத்தை இடம் மாற்றுவதே.

5. அந்தக் கூட்டத்தில் செல்லப்பா அணிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அதிகாரத்தின் வழி ஒரு ஏக்கர் நிலத்திற்கு மாறிச் செல்லவும் ஆலயத்திற்கு ரீங்கிட் ஒரு மில்லியனும் வழங்கினால் தற்போதுள்ள இடத்தை மேம்பாட்டாளருக்கு விட்டுவிடவும் சம்மதித்தனர்.

6. அதன்பின் மேம்பாட்டாளர் செலவில் மாற்று இடத்தில் ஆலயச் சிற்பங்களை இடம்மாற்றிப் பூஜைகள் செய்யத் தேவையான பாலபிசேக மண்டபமும் நிறுவப்பட்டு
விட்டது.

7, முன்பு சீபில்ட் மாரியம்மன் ஆலயத்தின் அருகில் அமைந்திருந்த காளியம்மன் ஆலயத்திற்கும், புதிய இடமான புத்ரா ஹைட்டில் 1 ஏக்கர் நிலம் வழங்கப் பட்டுள்ளதாகவும், மேலும் இவ்விரண்டு ஆலயங்களும் கூட்டாகப் பயன் படுத்த, 3\4 ஏக்கர் நிலம் கார் நிறுத்த இடமாக வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டது.

இப்படிப்பட்ட சூழலில் திரு, ராமாஜி தலைமையிலான சீப்பீல்ட் தோட்ட மஹா மாரியம்மன் ஆலய நடவடிக்கை குழு அந்த இரண்டு நிர்வாகங்களையும் தான் ஏற்று கொள்ளவில்லை என்றும், சரித்திரத்தை முன்னிலைப்படுத்தி ஆலயம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்கிறது.

திரு. செல்லப்பா மற்றும் நாகராஜூ இருவரும் நீதிமன்றத்தை அணுகிச் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாலும், அவர்களின் கைவசம் நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாலும், மாநில அரசு எந்த நடவடிக்கையையும் மிகக் கவனத்துடன் நீண்டகால அடிப்படையில் ஆலயத்தின் நலனைக் கருதி அனைத்துச் சாராரும் செயல் படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

எல்லாச் சாராரும் நன்கு ஆலோசித்து அனைவருக்கும் பயனுள்ள ஒரு முடிவினைச் செய்தால் அதற்கு மாநில அரசின் ஆதரவு கிடைக்கும். இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ள எல்லாக் கருத்துகளும் மாநில மந்திரி புசாருக்குத் தெரிவிக்கப் படும்.

நல்ல முடிவுக்கு நாங்கள் எப்பொழுதும் ஆதரவு அளிப்போம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசாரைப் பிரதிநிதித்த சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ ஆகிய இருவரும் கூறினர்.


Pengarang :