SELANGOR

உறவுக்கார மகன், அஸ்மினிடம் பணத்தை ஒப்படைத்தாக மிரட்டி ஒத்துக் கொள்ள சொன்னார்கள்

சுபாங், டிசம்பர் 9:

அம்னோ தலைவர்கள் ஆண்மை உள்ளவர்களாக இருந்தால் தன்னிடம் நேரிடையாக மோத வேண்டும், மாறாக தம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் அல்ல என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சவால் விடுத்தார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அஸ்மின், மலேசிய  ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) அம்னோ தேசிய முன்னணியின் கைப்பாவையாக செயல்பட்டு தனது உறவினரின் மகனை பொய் வாக்குமூலம் அளிக்க மிரட்டியதன் வழி தெள்ளத்தெளிவாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.

”  நேற்று எனது உறவுக்கார மகன் 10 நாட்களாக கைது செய்த பிறகு, நேற்று விடுதலை செய்யப்பட்டார். தனது வழக்கறிஞரிடம் நிறுவனத்தின் பணத்தை என்னிடம் கொடுத்ததாக பொய் வாக்குமூலம் அளிக்க மிரட்டினார்கள் என்று கூறியிருந்தார். ஆனால், அவர் என்னைப் போல் கொள்கை உள்ளவர். எஸ்பிஆர்எம்மின் மிரட்டலுக்கு அடி பணியாத அவர், என்னை சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று நேரிடையாக எஸ்பிஆர்எம் அதிகாரிகளிடம் தெரிவித்தார். எனது உறவுக்காரத் தந்தை ஒரு கொள்கைவாதி, குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்க மாட்டார் என்று ஆணித்தரமாக கூறினார்,” என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசாவின் சேவை மையத்தில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின்  ‘மக்களின் மீது அக்கறை’ சூறாவளி பயண நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு பேசிய போது கூறினார்.

 

ஆனாலும், ஊழல் தடுப்பு ஆணையம் அவரை சம்பந்தப்படுத்தி எந்த ஒரு  ஆதாரத்தையும் எடுக்க இயலவில்லை என்று விவரித்தார். தீய அரசியல் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் தனது மக்கள் போராட்டத்திற்கு பின்னடைவு ஏற்படாது என்று சூளுரைத்தார்.

”  இவர்கள் இதோடு நிறுத்தி விடுவார்களா? இல்லை, அவர்கள் என்னை பல்வேறு சூழ்ச்சிகளை செய்வார்கள். என்னை அவமானப்படுத்துவார்கள். இது போராட்டத்தில் எதிர் பார்த்த ஒன்றுதான். என் குடும்ப உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது கோழைத்தனமாக ஓட மாட்டேன். அப்படி நான் ஒன்றும் அம்னோ இளைஞர் பிரிவினர் போல் கோழை அல்ல. நான் இப்படிப்பட்ட அவதூறுகளை முழுமூச்சாக எதிர்த்து போராட்டம் நடத்துவேன்,”  என்று சூசகமாக குறிப்பிட்டார்.

#தமிழ் அரசன்


Pengarang :