NATIONALRENCANA PILIHANSELANGOR

எல்லை சீரமைப்புக்கு எதிரான புகார்களை விசாரிக்க அவசரம் காட்டக்கூடாது

ஷா ஆலம், டிசம்பர் 21:

எல்லை சீரமைப்பிற்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார்களை விசாரிக்க தேர்தல் ஆணையம் காட்டி வரும் அவசரம் நாட்டின் 14வது பொதுத் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா எனும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலாங்கூரில் அந்த புகார்களுக்கு எதிரான விசாரணையை தேர்தல் ஆணையம் வரும் புதன்கிழமை (27.12.2017) மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் புகார் செய்தவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. சம்மதப்பட்ட வாரம் விடுமுறைகாலம் என்பதால் அனைவரும் குடும்பத்தோடு சொந்த ஊர்களிலும் வெளியூர்களிலும் இருக்கும் தருணத்தில் விசாரணைக்கு அழைப்பது ஏற்புடையதல்ல என்று மாநில மந்திரி பெசார் அலுவலகத்தின் தொடர்பு வியூகப்பிரிவு இயக்குநர் ஹின் ஷாவ் லோங் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையத்திற்கு இது தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள 2018 செப்டம்பர் மாதம் வரை கால வரைவு இருக்கும் நிலையில் சிலாங்கூரில் அவசரமாக அதனை முன்னெடுப்பதன் அவசியம் தான் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பினார். கிருஸ்மஸ் கொண்டாட்டம் பள்ளிக்கூட தொடக்கம் என மக்கள் பரப்பரப்பாக இருக்கும் சூழலில் இது அவசியம் தானா என்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
நாட்டின் 14வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கை ஐயத்தை ஏற்படுத்துவதோடு 14வது பொதுத் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா அல்லது மலேசிய வரலாற்றில் அஃது மோசமான தேர்தலாக அமையுமா எனும் ஐயமும் எழுந்துள்ளது.

அதேவேளையில் தொடர்ந்து ஆட்சியில் ஆளுமை செலுத்த குறிப்பிட்ட தரப்பின் தலையீடு இதில் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் கூறிய அவர் எல்லை சீரமைப்பின் மூலம் ஆட்சியை தற்காத்துக் கொள்ள ஒரு தரப்பு முனைவதாகவும் குறிப்பிட்டார்.
எல்லை சீரமைப்பு நேர்மையற்ற முறையிலும் பாராபட்ச தன்மையோடும் மேற்கொள்ளப்படுகிறது.

அஃது தேசிய முன்னணிக்கு சாதகமாகவும் அமைவதாக கூறிய அவர் சிலாங்கூர் மாநிலத்தின் நிர்வாகத்திறனோடு போட்டியிட முடியாமல் குறுக்கு யுக்தியை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்கு தேர்தல் ஆணையமும் துணைப்போகிறது என்றார். சுதந்திரமாக இயங்க வேண்டிய தேர்தல் ஆணையம் தேசிய முன்னணியின் பதுமையாக செயல்படுவதாக கூறிய அவர் மலேசியர்கள் மிகவும் விவேகமாகவும் திறன்படவும் நடந்துக் கொள்ள வேண்டும்.வாக்காளனின் உரிமையை இழந்து விடக்கூடாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் மலேசியர்கள் ஒற்றுமையோடு ஒருமித்த சிந்தனையோடு வாக்களிக்க முன் வர வேண்டும்.தேர்தலின் வெற்றி மக்களுக்கான வெற்றியாய் இருக்க வேண்டும் ஊழல்,லஞ்சம் மற்றும் கைகூலிகளின் தனிப்பட்ட வெற்றியாய் அஃது அமையக்கூடாது என்றும் எச்சரித்தார்.

#தமிழ் அரசன்


Pengarang :