NATIONAL

பாக்காத்தான் புத்ராஜெயாவை கைப்பற்றினால் துன் மகாதீர் வழிகாட்டியாக செயலாற்றுவார்

ஷா ஆலம், டிசம்பர் 13:

எதிர் வரும் 14-வது போதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைமைத்துவத்தில் புதிய மத்திய அரசாங்கம் அமையும் தருணத்தில் துன் டாக்டர் மகாதீர் முகமட் வழிகாட்டியாகவோ அல்லது ஆலோசகராகவோ செயல்படலாம் என்று பேராசிரியர் முனைவர் ஷாரூடின் படாரூடின் கூறினார்.

சிலாங்கூர் பல்கலைக் கழகத்தின் (யுனிசெல்) துணை இணை வேந்தரான ஷாரூடின் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் ஆவார். மலேசிய நாட்டின் பிரதமர் பதவியில் 22 ஆண்டுகள் ஆட்சி செய்த அனுபவம் மகாதீருக்கு உண்டு என்பதனை மறந்து விட வேண்டாம் என்றார்.

”   பிரதமர் வேட்பாளராக இருப்பவர் பல்வேறு தகுதிகள் இருக்கவேண்டும். முதலில் நிர்வாக அனுபவம் வேண்டும். முன்பு எதிர்க்கட்சிகளுக்கு நிர்வாக செய்யும் திறமை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று அனைவரும் நம்பினார்கள். ஆனால் இன்று, சிலாங்கூர் மாநிலத்தின் நிர்வாக திறமையைக் கண்டு பெருமிதம் கொள்கிறார்கள். ஆக, இப்போது அனுபவம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.

 

 

 

 

”  பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைமைத்துவத்தில் தற்போது டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆக, பிரதமர் வேட்பாளராக தகுதி இழந்து இருக்கிறார். தற்போதைய உலக அரசியல் சூழலில் கனடா, பிரான்ஸ் மற்றும் பல நாடுகளில் இளைஞர்களே நாட்டின் உயரிய பதவியில் இருக்கின்றனர்.

”  துன் மகாதீரை மீண்டும் பிரதமர் பதவியில் கொண்டு வரும் நடவடிக்கை சரி என்றாலும், அவர் ஒரு வழிகாட்டி அல்லது ஆலோசகராக செயல்பட்டு வந்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அவரின் நீண்ட கால நிர்வாக அனுபவம் இளம் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

இளைஞர் அல்லது 40 வயதில் இருந்து 50 – வரை உள்ள பிரதமர் வேட்பாளர் இளம் வாக்காளர்களை ( 21 வயது முதல் 35 வயது) கவர முடியும் என்றார். அனுபவம் இருந்தாலும் வயது மற்றும் அரசியல் நிலைத்தன்மை போன்றவை பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.


Pengarang :