SELANGOR

புத்ராஜெயாவில் அமையும் பாக்காத்தான் அரசாங்கம், சிலாங்கூரை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும்

கிள்ளான், டிசம்பர் 7:

எதிர் வரும் போதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி பெற்ற பின் சிலாங்கூர் மாநில அரசாங்க நிர்வாகத்தில் செயல்படுத்தப்படும் பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர்) விரிவாக்கம் செய்யப்பட்டு புத்ரா ஜெயாவில் அமையும் மத்திய அரசாங்கத்தின் திட்டங்களாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி ஆளும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஐபிஆர் திட்டங்களின் மூலம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி சிறந்த நிலையில் உள்ளது என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் கூறியது போல பாக்காத்தான் இன்னும் அரசாங்கத்தை நிர்வாகம் செய்ய தயாராகவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று விவரித்தார்.

”  சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு ஐபிஆர் திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றியடைந்துள்ளோம். இந்த வெற்றியின் மூலம் பாக்காத்தான் நாட்டை நிர்வாகிக்க முடியும் என்று புள்ளி விவரங்களுடன் நிரூபித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த முறையிலும் நேர்மையான வழியிலும் நிர்வாகம் செய்ய பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைமைத்துவம் தயாராக இருக்கிறோம்,” என்று காப்பாரில் ஸ்ரீ செமந்தா அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற ஐபிஆர் சூறாவளி பயணம நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் பேசுகையில், சிலாங்கூரில் பாக்காத்தான் அரசாங்கம் மாநிலத்தின் வளங்களை நீதியான முறையில் எல்லா இனங்களுக்கும் பங்கிட்டு வந்துள்ளது என்றும் எல்லா சமூகத்தினரும் பயன் அடைந்தனர் என்றார். 2008-க்கு பிறகு சிலாங்கூர் மாநில மக்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு அம்னோ தேசிய முன்னணி ஆட்சியின் கீழ் இருந்ததை விட சிறந்த நிலையில் தற்போது வாழந்து வருகின்றனர் என்று சூளுரைத்தார்.

#கு.குணசேகரன்


Pengarang :