NATIONAL

பெல்டா நில விவகாரம்: நடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்

ஷா ஆலம், டிசம்பர் 25:

மத்திய அரசாங்கம் நடிப்பதை நிறுத்தி விட்டு, மத்திய நில மேம்பாட்டு வாரியத்தின் (பெல்டா) ரிம 200 மில்லியன் மதிப்பிலான நான்கு நிலங்களை உட்படுத்திய விசாரணையை நடத்த வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகமட் அகீன் கூறினார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இந்நில விவகாரத்தில் ஊழல் நடக்க வாய்ப்பில்லை என்று அறிக்கையை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

”  மலேசிய அரச காவல்துறை (காவல்துறை) உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணை தொடர்பாக தேசிய தலைமை வழக்கறிஞர் எப்படி பெல்டாவின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஈசா சாமாட் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பார்ப்போம்,” என்று ஷம்சுல் இஸ்கண்டர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

மேலும் கூறுகையில், தற்போதைய பெல்டா தலைவர், டான்ஸ்ரீ ஷாரீர் அப்துல் சமாட் தான் இந்த நில விவகாரம் நடக்கும் பொழுது பெல்டா இண்வெஸ்மண்ட் கோப்ரேஷன் நிறுவனத்தில் இல்லை என்றும், இதனால் தமக்கு எதுவும் தெரியாது என்று சாக்குபோக்கு கூற வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

”   ஷாரீர் நில விவகாரம் பெல்டா இண்வெஸ்மண்ட் கோப்ரேஷன் நிறுவனத்திற்கு தெரியாமல் நடந்துள்ளது என்று கூற்றைக் கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஷாரீர் கடந்த 2017 தொடக்கத்தில் பெல்டாவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் ஏன் இன்று நில விவகாரம் தொடர்பில் வாயைத் திறந்து இருக்கிறார்? ஆச்சரியமாக இருக்கிறது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

இதனிடையே, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தனது டிவிட்டரில் பெல்டா நிறுவனத்தின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப் பட்டவர்கள் மீது பெல்டா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்ற அறிக்கையை மேற்கோள்காட்டி ஷம்சுல் இஸ்கண்டர் இவ்வாறு தெரிவித்தார். நஜீப் ரசாக் தலைமைத்துவத்தின் கீழ் செயல்பட்டு  வரும் பெல்டா நிறுவனத்தின் நில விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளுமாறு அறிக்கை விடுத்த அவரின் செயலைக் கண்டு நான் ஆச்சரியம் அடைகிறேன் என்று விவரித்தார்.

”   நஜீப் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி எல்லா விசாரணைகளையும் நிறுத்த மாட்டார் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும். நஜீப் முதலில் பெல்டாவின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஈசா சாமாட் மற்றும் சம்பந்தப் பட்ட உயர்மட்ட அதிகாரிகளை அழைத்து விசாரிக்க வேண்டும். அதன் பிறகு, நேர்மையான முறையில் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தேசிய பெல்டா விவகார பிரிவின் தலைவருமான ஷம்சுல் இஸ்கண்டர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

#தமிழ் அரசன்


Pengarang :