NATIONAL

ஹிண்ட்ராஃப்: ஜமால் யூனோஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோலாலம்பூர், டிசம்பர் 9:

ஜசெக தலைவர்களில் ஒருவரும் சட்டத்துறை முன்னாள் அமைச்சருமான டத்தோ ஸைட் இப்ராகிம் தலையில் சுத்தியலால் அடிப்பேன் என்று அம்னோ சுங்கை பெசார் தொகுதித் தலைவர் டத்தோ ஜமால் யூனோஸ் வெளிப்படை-யாக அச்சுறுத்தியிருப்பதைக் கண்டு ஹிண்ட்ராஃப் அதிர்ச்சி அடைகிறது. சிலாங்கூர் சுல்தானை ஸைட் இப்ராகிம் விமர்சனம் செய்தார் என்பதற்காக இப்படி அரசியல் வன்முறையை பகிரங்கமாக கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஜமால் யூனோஸ்மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் போலீஸ் அமைதி காப்பது, அவரின் நடவடிக்கையை ஆதரிப்பதை போலாகும். அத்துடன், இப்படிப்பட்டவர்கள் சட்டத்திற்கும் மேலானவர்கள் என்ற நிலையை நாளடைவில் ஏற்படுத்தும் என்று இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் ஹிண்ட்ராஃப் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆதிக்க மனப்பான்மை கொண்ட இத்தகைய அம்னோ தலைவர்கள் சட்டத்தின் ஆட்சியை புறக்கணிப்பதுடன் காவல் துறையை தங்களின் ஏவல் துறையாக மாற்றியும் வருகின்றனர். அராஜகமாகவும் ஆதிக்கமாகவும் வெளிப்படும் அம்னோ கூறுகள் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை சிதைக்கும் அதே வேளை, கூட்டரசு அரசியல் சாசனத்தின் மாட்சிக்கும் இழுக்கு ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் பார்க்கும்பொழுது, நாடு எங்கே போகிறது என்ற கேள்வி ஒவ்வொரு முடிமகனின் உள்ளத்திலும் எழுகிறது.

அம்னோ தலைவர்கள் இத்தகைய நடவடிக்கையை ஊக்குவிக்கின்றனர். அரசாங்கத்தின் போலீஸ் துறையும் இதற்கு துணைபோகிறது. இத்தகையப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டியதுடன் ஜமால் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், அம்னோ அதிகாரவர்க்கத்தின் சர்வாதிகாரப் போக்கு தலைதூக்குவதுடன் பொது மக்களை அலட்சியப்படுத்துவதும் தொடரும்.

இதன் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் அலட்சியப்போக்கையும் மனித உரிமை அமைப்புகளின் பாராமுகத்தையும் கண்டு ஹிண்ட்ராஃப் மிகவும் கவலை கொள்கிறது. பொது மக்களை தற்காப்பதுடன் சமூக நல்லிணக்கதையும் ஒற்றுமையையும் நிலைநாட்ட வேண்டிய அரசாங்கக் கட்டமைப்பு, அம்னோ தலைவர்களை தற்காக்கும் இந்த நிலையிலும் எதிரணிக் கட்சிகளின் அமைதியும் இயலாமையும் தொடர்ந்தால், அது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். நாட்டின் அரசியல் சாசனத்திற்கும் சட்ட நடைமுறைக்கும் அப்பாற்பட்டவர்கள் அம்னோ தலைவர்கள் என்பதை இனியும் அனுமதிக்கக் கூடாது.

ஸாகிட் இப்ராகிம் ஒரு நல்ல தலைவர் என்பதைவிட தலைசிறந்த குடிமகன் என்பதால் நாமெல்லாம் அவருக்குப் பின்னால் அணி வகுக்கின்றோம். சமூக ஊடகத்தில் அவர் நெருடலான கருத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அடிப்படை மனித உரிமைச் சட்டப்படி அவருக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கப் பட வேண்டும். அவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டிருந்தாலும் காவல்துறையினர் மற்றத் தரப்பினரின் தலையீடு இன்றி சுதந்திரமாக உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஸாகிட், பொதுவாக அநீதிக்கு எதிராக குரலெழுப்பும் மனித நேயர். இன, மத சம்பந்தப்பட்ட தீவிரவாத நடவடிக்கையைக் கண்டிக்க அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. தேசிய அளவில் அனைத்து மக்களுக்கும் சேர்த்து ஒருசேர குரலெழுப்பும் தலைவரும் சட்ட அறிஞருமான டத்தோ ஸாகிட்டிற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பொன்.வேதமூர்த்தி தன்னுடைய அறிக்கையில் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
#வீரத் தமிழன்


Pengarang :