NATIONAL

அம்னோ-தேசிய முன்னணி மக்களின் பெரும்பான்மையை இழக்க நேரிடும்

ஷா ஆலம்,ஜனவரி 10:

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணி ஹராப்பான் கூட்டணியிடம் பெரும் சவாலை எதிர்நோக்கும் அதேவேளையில் மக்களின் ஒட்டுமொத்த பெரும்பான்மை வாக்குகளை பெறவும் அஃது பெரும் சிரமத்தை எதிர்நோக்கலாம்.
கடந்த 13வது பொதுத் தேர்தலை போலவே வரும் 14வது பொதுத் தேர்தலிலும் அம்னோ தேசிய முன்னணி பெரும்பான்மை வாக்குகளை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கினாலும் அஃது அதன் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை தற்காத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக நியூ ஸ்ட்ரெட் டைம்ஸ் பிரெஸ் (என்.எஸ்.டி.பி) நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியர் டத்தோஸ்ரீ காலீமுல்லா ஹசான் தெரிவித்தார்.

கடந்த 13வது பொதுத் தேர்தலில் முதன்முறையாக அம்னோ தேசிய முன்னணி ஒட்டுமொத்த வாக்குகளின் பெரும்பான்மையை இழந்தது.கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 47.4 விழுகாடும் அன்றைய மக்கள் கூட்டணி 52 விழுகாடும் பெரும்பான்மை வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மை வாக்குகளை பெறுவதில் தேசிய முன்னணி தோல்வியை சந்தித்திருந்தாலும் வெற்றி பெற்ற நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையில் ஆட்சியை அஃது தற்காத்துக் கொண்டது.கடந்தமுறை புறநகர் பகுதிகளில் தீபகற்ப மலேசியாவில் தேசிய முன்னணி பெரும்பான்மை வெற்றியை பதிவு செய்த வேளையில் நகர்புறங்களில் பாக்காத்தானுக்கு பெரும் ஆதரவு கிட்டியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில்,பெர்ணாமா செய்தி எஜெண்டின் நிர்வாகி டத்தோஸ்ரீ அஸ்மான் உஜாங் கூறுகையில் அம்னோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியை தற்காத்துக் கொள்ளும் என கணிக்கப்பட்டாலும் அஃது பெரும் சிரமத்தையும் சிக்கலையும் எதிர்நோக்கும் என்றார்.
நாட்டில் நடப்பு அரசாங்கத்தின் மீதிலான பல்வேறு சர்ச்சைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதார பிரச்னைகள் ஆகியவை தேசிய முன்னணிக்கு பெரும் சவாலாக விளங்கும் என்றார்.
மேலும்,சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களிலும் புறநகர் பகுதியின் மலாய்காரர்களின் வாக்குகளும் அம்னோ தேசிய முன்னணிக்கு தொடர்ந்து சாதகமாய் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.

இதற்கிடையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹராப்பான் கூட்டணியின் மாநாட்டில் முன்னாள் பிரதமர் துன் மகாதீரை அக்கூட்டணி பொதுத் தேர்தலில் வென்றால் மீண்டும் பிரதமராக அறிவித்திருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்றும் கருத்துரைக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துக் கொண்ட போது அவர்கள் இதுதொடர்பில் கருத்துரைத்தனர்.

#தமிழ் அரசன்


Pengarang :