SELANGOR

இந்திய சமுதாய மேம்பாட்டிற்கு வெ.9.7 மில்லியன் மானியம்

பத்துகேவ்,ஜனவரி31:

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக சிலாங்கூர் மாநில அரசாங்கம் பல்வேறு நிலைசார்ந்து சுமார் வெ.9.7 மில்லியனை ஒதுக்கியிருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட மானியம் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாடு(வெ.5 மில்லியன்),ஆலயங்களுக்கு (வெ.5 மில்லியன்) மற்றும் வர்த்தகம் மற்றும் அது சார்ந்த பயிற்சிகளுக்கு (வெ.3 மில்லியன்) என பிரித்தளிக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து இம்மானியங்களை உயர்த்தியும் வருவதாக கூறிய அவர் இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட வெ.5 மில்லியனையும் சுட்டிக்காண்பித்தார்.

இதற்கிடையில்,ஆலயங்களுக்காக இவ்வாண்டு வெ.1.764 மில்லியன் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று இரவு ஆலயங்களின் செயல்பாட்டிற்காக வெ.450,000ஐ வழங்குவதாகவும் அவர் கூறினார்.தைப்பூசத்தை முன்னிட்டு பத்துகேவ் முருகன் ஆலயத்திற்கு வருகை அளித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

கடந்தாண்டு சிலாங்கூர் மாநில இந்தியர் தொழில்முனைவர் திட்டம் ஆக்கப்பூர்வமான இலக்கை எட்டியதன் காரணத்தினால் அதற்காக ஒதுக்கப்பட்ட வெ.1 மில்லியன் மானியம் இவ்வாண்டு வெ.3 மில்லியனாக மாநில அரசு உயர்த்தியதையும் மந்திரி பெசார் சுட்டிக்காண்பித்தார்.கடந்தாண்டு இத்திட்டத்தின் கீழ் 470 தொழில் முனைவர்கள் உருவாக்கப்பட்டதாகவும் கூறினார்.

மாநில அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் மீதும் அவர்கள் சார்ந்த கல்வி மற்றும் பொருளாதாரத்திலும் ஆக்கப்பூர்வ கவனத்தை செலுத்தி வருவதாகம் இவ்விரு துறைகளும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் வழிகோலும் என்றும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மாநில அரசாங்கம் கொடுத்து வரும் ஆதரவும் பலமான ஒத்துழைப்பும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி அவர்கள் தொடர்ந்து இந்நாட்டில் பாதுகாப்புடனும் வசதியாகவும் வாழ வழி செய்கிறது.இது நம் நாடு எனும் உணர்வோடு நாம் ஒன்றுப்பட்டு வாழ்வதே காலச் சிறந்தது என்றும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.


Pengarang :