SELANGOR

சிலாங்கூரை நேசமிக்க மாநிலமாய் மேம்படுத்துவோம் – மந்திரி பெசார் கோரிக்கை

பத்துகேவ்ஸ்,ஜனவரி31:

சிலாங்கூர் மாநிலத்தை நேசமிக்க பரிவுக் கொண்ட மாநிலமாய் மேம்படுத்துவதே நமது தலையான முதன்மை இலக்கு என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் எந்தவொரு இனமும் எந்தவொரு வர்க்கமும் விடுப்பட்டு விடக்கூடாது என்பதில் தனித்துவ கவனம் செலுத்திடும் மாநில அரசாங்கம் மக்கள் மீது பரிவுக் கொண்டிருப்பதோடு அவர்களின் வாழ்வாதரத்தையும் காப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் வாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டின் மூலதனமாக விளங்கிடும் பொருளாதாரம்,கல்வி உட்பட சமூகநலன் ஆகியவற்றிலும் வேறுபாடு இன்றி அனைத்து தரப்பின் மீது மாநில அரசாங்கம் நேசமிக்க சிந்தனையோடு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் நினைவுறுத்தினார்.

இம்மாநிலத்தின் மந்திரி பெசார் எனும் நிலையில் இம்மாநிலம் தொழிற்துறையிலும்,பொருளாதார நிலையிலும் மேம்பாடு கண்ட மாநிலமாய் உருவெடுத்து வந்தாலும் இம்மாநிலம் நேசமிக்க பரிவுக்கொண்ட மாநிலமாய் மேம்பாடு காண்பதே ஆக்கப்பூர்வமானதாக விளங்கும் என்று மந்திரி பெசார் தனது எண்ணத்தையும் பதிவு செய்தார்.

இங்கு பேதங்கள் இல்லை.அனைவரும் சமம் என்றும் உணர்த்திய அஸ்மின் அலி நாம் இந்தியர்களையும் நேசிக்கிறோம்,மலாய் மற்றும் சீனர்களையும் நேசிக்கிறோம் என்றும் பெருமிதமாய் கூறினார்.தைப்பூச திருநாளுக்கு பத்துமலை முருகனை தரிசிக்க வந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மத்தியில் அஸ்மின் அலி இதனை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் இம்மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனையும் நாம் நேசிக்கும் பண்பினை கொண்டுள்ளோம் எனவும் குறிப்பிட்ட அவர் இத்தகைய சிந்தனையும் செயல்பாடும் சிலாங்கூர் மாநிலத்தோடு நின்று விடாமல் மலேசிய ரீதியில் படந்திருக்க வேண்டும் என்றார்.நேசமிக்க மாநிலம் எனும் வகையில் சிலாங்கூர் வாழ் மக்களின் நலனில் தனித்துவம் செலுத்திடும் அதேவேளையில் இந்தியர்களின் சமூகநலனிலும் மாநில அரசாங்கம் தொடர்ந்து அதன் அக்கறையை வெளிப்படுத்திடும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இதற்கிடையில்,சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்கள் சுதந்திரமாகவும் தன்மானத்தோடும் வாழ்ந்திட அவர்கள் பொருளாதாரம்,கல்வி மற்றும் சமூகநலன் ஆகியவற்றில் தனித்துவமான இடத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் நினைவுறுத்தினார்.மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்போடும் ஆதரவோடும் அவர்கள் அந்நிலையினை எட்டிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நான் முஸ்லிமாக இருந்தாலும் மாநில அரசாங்கத்தின் பிரதிநிதி எனும் நிலையில் இம்மாநிலத்தில் இந்தியர்களின் சமய உரிமைக்கு முழு சுதந்திரம் வழங்குவதாக தெரிவித்தார்.இந்தியர்களின் சமய உரிமை நிலைநாட்டப்படும், இந்துக்களின் மத நம்பிக்கையும் சமய சித்தாந்தமும் பாதுகாக்கக்கப்படும் என்றும் நம்பிக்கை அளித்தார்.மேலும்,சிலாங்கூர் மாநிலத்தில் அனைவரும் புரிந்துணர்வோடு ஒற்றுமையாய் சுபிட்சமாய் வாழ்ந்திட அனைவரின் பண்பாட்டிற்கும் உரிய மதிப்பும் உரிமையும் வழங்கப்படும் என்றும் அஸ்மின் அலி கூறினார்.

சிலாங்கூர் மாநிலம் நமது மாநிலம்.சிலாங்கூர் மாநிலம் மக்களுக்கான மாநிலம்.இம்மாநிலம் இனம்,மதம் மற்றும் ஒரு இனத்தின் பின்னணி ஆகியவற்றை கடந்து அனைவருக்குமான உன்னதமான மாநிலம் என்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மக்கள் முன்னிலையில் பத்துகேவ் முருகன் ஆலய வளாகத்தில் பெருமிதமாய் கூறினார்.


Pengarang :