NATIONAL

துன் மகாதீர்-பிரதமர் மற்றும் வான் அஸிஸா-துணைப் பிரதமர் வேட்பாளர்களாக பாக்காத்தான் அறிவித்தது

ஷா ஆலம், ஜனவரி 7:

பெர்சத்து கட்சியின் ஆலோசகர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை 14-வது பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றினால்  பிரதமர் வேட்பாளராக பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி இன்று அறிவித்தது. கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயிலை துணைப் பிரதமர் வேட்பாளராகவும் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை சேர்ந்த நான்கு கட்சிகளின் தலைவர்களும் இந்த பரிந்துரையை ஒப்புக் கொண்டு கையொப்பமிட்டதாக மாநாட்டில் தலைமைச் செயலாளர் டத்தோ சைப்பூஃடின் அப்துல்லா அறிவித்தார்.

”   பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமைத்துவத்தை நாம் பலப்படுத்த வேண்டும். அனைத்து கூட்டணி கட்சிகளின் அங்கத்தினர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். நாட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்தவுடன் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு அரசு மன்னிப்பு வழங்க உடனடியாக  விண்ணப்பம் செய்யப்படும்.  இந்த நடவடிக்கையின் மூலம் அன்வார் அரசியலில் மீண்டும் ஈடுபட்டு நாட்டின் எட்டாவது பிரதமராக முடியும்,” என்று விவரித்தார்.

இதனிடையே தீபகற்ப மலேசியாவில் உள்ள 165 நாடாளுமன்ற தொகுதிகளில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது என்று சைப்பூஃடின்  அறிவித்தார். பெர்சத்து கட்சி அதிகபட்சமாக 52 தொகுதிகளிலும், கெஅடிலான் 51, ஜசெக 35 மற்றும் அமானா கட்சி 27 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் என்று முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

#தமிழ் பிரியன்


Pengarang :