NATIONAL

சகோதரரி வசந்தப்பிரியா உயிரிழப்பு – சமுதாயத்திற்கு பேரிழப்பு

செபெராங் பிறை, நிபோங் திபால் மெதடிஸ் இடைநிலை பள்ளி மாணவியான வசந்தப்பிரியா த/பெ முனியாண்டி, அதே பள்ளியின் ஆசிரியர் ஒருவரின் கைப்பேசி தொலைந்து போனதாக ஆசிரியர் விசாரித்ததால் அவமானம் தாங்காது மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பயனளிக்காமல் மரணமடைந்த சம்பவத்தைக் கண்டு மலேசிய மக்கள் அனைவரும் பெரும் கவலை அடைந்தனர்.

கடந்த 24-ஆம் திகதி சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கவனக்குறைவால் எங்கோ தவறவிட்ட விவேக கைப்பேசி தொடர்பில் தங்கை வசந்தப்பிரியாவிடம் சில ஆசிரியர்கள் மாறி மாறி விசாரணை மேற்கொண்டது மட்டுமின்றி சில மணிநேரத்திற்கு வகுப்பறையில் பூட்டி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வருத்தப்பட வேண்டிய விடயம் என்றால் அது மிகையாகாது.

வசந்தப்பிரியா, தான் அந்த கைப்பேசியை எடுக்கவில்லை என்று கெஞ்சிக் கூத்தாடிச் சொல்லியும், திருப்தி கொள்ளாத சம்பந்தப்பட்ட ஆசிரியரும் அவர் கணவரும் வசந்தபிரியாவை வாகனத்தில் ஏற்றி அவர் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தியுள்ளது சட்டத்தை தன் கையில் எடுத்த செயலாகும்.

இந்த விடயத்தில் நாம் கல்வி அமைச்சைக் கேட்க வேண்டியது, ஆசிரியர் கைபேசியை வகுப்பறைக்கு ஏன் எடுத்து வர வேண்டும்? அடைத்து வைத்து இவர்களை விசாரிக்க யார் அனுமதி அளித்தது? மாணவி வீட்டிற்கு செல்ல அதிகாரம் உண்டா? இவையெல்லாம் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் கட்டொழுங்கு ஆசிரியர்களுக்கு தெரிந்து நடைபெற்றதா? இந்த கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பது?

கைப்பேசியை திருடியதாக சக மாணவர்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டதால் அவமானப்பட்டது மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது அறையில் தூக்கிலிட்டு தற்கொலைக்கு முயற்சித்த பின்னர் பெற்றோர்களால் மீட்டு அருகிலுள்ள செபெராங் செயா மருத்துவமனையில் சேர்த்து ஒருவார தீவிர சிகிச்சை அளித்தும், சுயநினைவு திரும்பாமலே உயிரிழந்தது குடும்பத்தை மட்டுமில்லாமல் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது.

ஆனாலும், தற்கொலை முயற்சி செய்வது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்தில் தெளிவாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சிறுவயதிலேயே மனவலிமையுடன், எதையும் சமாளிக்கும் தைரியமான பிள்ளைகளாக வளர்க வேண்டும். இளைய தலைமுறையினர் குறிப்பாக மாணவ மணிகள், தம்பி தங்கைகள் யாவரும் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

தீராத துயரத்தில் இருக்கும் தங்கை வசந்தப்பிரியாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வேளையில், இந்த மரணத்தை பாரபட்சமின்றி காவல்துறை விசாரணையை நடத்த வேண்டும் என்று சிலாங்கூர் இன்று கேட்டுக் கொள்கிறது.

சிலாங்கூர் இன்று ஆசிரியர்


Pengarang :