SELANGOR

சிலாங்கூரில் இந்தியர்கள் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும்

பூச்சோங், பிப்ரவரி 4:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமைத்துவத்தின் கீழ் மாநில அரசாங்கம் இந்தியர்களின் நலனை பேணிக் காக்கப் படுகிறது என்று சிலாங்கூர் மாநில தோட்டத் தொழிலாளர், வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க அரசாங்கம் ஆகிய நிரந்தர குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் கூறினார். அஸ்மின் அலியின் நிர்வாகத்தில் இந்தியர்களின் உரிமை நிலை நிறுத்தப்படுகிறது என்றார்.

”   சில பொறுப்பற்ற தரப்பினர் தற்போதைய பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் கீழ் உள்ள மாநில அரசாங்கம் முன்புள்ள தேசிய முன்னணி அரசாங்கத்தை விட என்ன சாதித்து விட்டது என்று கேள்வி எழுப்புகிறார்கள். சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் எல்லா இனங்களையும் மற்றும் மதங்களையும் வேறுபாடுகள் இன்றி கவனித்து வருகிறார். இதற்கு சான்றாக, தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம 1 மில்லியன் உயர்த்தி ரிம 5 மில்லியனாக இந்த ஆண்டு நமக்கு கொடுத்திருக்கிறார். இதன் வழி இந்திய சமுதாயத்தின் நலன் மீது அக்கறை கொண்ட அவரின் பண்பை காட்டுகிறது,” என்று பூச்சோங் 14-வது மைலில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் பேசுகையில் இவ்வாறு கணபதி ராவ்  தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் 2018-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இந்தியர்களின் சமூக மேம்பாட்டிற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை சுட்டிக் காட்டினார்.

#தமிழ் பிரியன்


Pengarang :