NATIONAL

இனவாதம் வேண்டாம் ; மலேசியர்களாக ஒன்றிணைவோம் !!!

நாட்டின் 14வது பொதுத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் புத்ரா ஜெயாவை கைப்பற்றும் இலக்கோடு ஹராப்பான் கூட்டணி ஆயத்தமாகி வரும் வேளையில் நாம் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் நமது இலக்கை எட்ட வேண்டுமானால் இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மலேசியர்கள் எனும் ஒரே இலக்கோடு ஒன்றிணைய வேண்டும்.
சுமார் 60 ஆண்டுகாலம் நாட்டை ஆட்சி செய்து வந்த அம்னோ தேசிய முன்னணி மீது மக்கள் விரக்தியும் அதிர்ப்தியும் கொண்டு ஹராப்பான் கூட்டணியை ஆதரிக்க பெரும் காரணமே அம்னோ தேசிய முன்னணி கொண்டிருந்த இனவாத போக்கும் இனவாத தன்மையையும் தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.


புதியதொரு மலேசியாவை கட்டமைக்கவும் உலக அரங்கில் புத்தெழுச்சியோடு மலேசியா பீடுநடை போடவும் இனவாதம் அற்ற அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் உருவாக வேண்டும். அவ்வகையில், ஹராப்பான் கூட்டணி இனவாத சிந்தனையற்ற கூட்டணியாய் உயிர்க்கொள்ளும் போதுதான் புதியதொரு மலேசியாவை நாம் உருவாக்க முடியும்.இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மலேசியர்களாக நாம் ஒன்றிணையும் போது நமது இலக்கும் சாத்தியமாகிறது.

இனவாதத்தை துடைத்தொழித்து,நாம் மலேசியர்களாக ஒன்றிணையும் போதுதான் அரசியல் ரீதியிலும் அரசாங்க ரீதியிலும் நாம் வலுவான கூட்டணியாகவும் வலுவான அரசாங்கமாகவும் நிலைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தக்காலங்களில் அம்னோ தேசிய முன்னணி கையாண்ட இனவாத போக்கு மக்கள் மத்தியில் இனியும் எடுப்படாது.இங்கு சிறுபான்மை முதல் பெரும் இனம் வரை இனவாதத்தை விரும்பவில்லை.குறிப்பாக இளம் சமூகம் இனவாதத்திற்கு அப்பால்பட்டு மனிதம் கொண்ட மலேசியர்களாக கரம்கோர்த்து முன்னேறவே துடிக்கிறார்கள் என்பதுதான் இயல்பியல் உண்மை.


ஒட்டுமொத்த மலேசியர்களும் வெறுக்கும் இனவாத போக்கினை விட்டொழித்து ஹராப்பான் கூட்டணி களமிறங்கினால் அம்னோ தேசிய முன்னணியின் இனவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். அந்நிலையில், ஹராப்பான் கூட்டணியில் இனவாத சிந்தனையோடு எந்தவொரு அரசியல் கட்சியும் அதன் செயல்பாட்டினையும் நடவடிக்கையினையும் முன்னெடுக்ககூடாது என்பதே மலேசியர்களின் பெரும் எதிர்பார்ப்பு.அதுபோல்,ஹராப்பான் கூட்டணியை ஆதரிக்கிறோம் என கூறும் எந்தவொரு அரசியல் கட்சிகளும் நாங்கள் ஒரு இனத்தை சார்ந்தவர்கள்,அவர்களின் பிரதிநிதி எனும் சிந்தனையோடு ஹராப்பான் கூட்டணியில் இணையக்கூடாது என்பதும் மலேசியர்களின் பெரும் எதிர்பார்ப்பு.

ஹராப்பான் கூட்டணியில் இனவாதம் ஊடுருவினால் நாம் பெரும் இழப்பினை சந்திக்க நேரிடும்.அது மீண்டும் நம்மை பின்னோக்கிய அரசியல் சூழலுக்கு இட்டுச்செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.இனவாத சிந்தனை ஹராப்பான் கூட்டணியில் துளிர்விட்டால் அது கடல் போல் மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் துளி விஷம் கலந்தது போல் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.நமது மறுமலர்ச்சி தந்தை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் எதிர்மறையான சூழலை இந்த இனவாதம் உருவாக்கி விடும்.

ஹராப்பான் கூட்டணியில் இனம் சார்ந்து பிரதிநிதிகளை அடையாளம் கண்பதை காட்டிலும் மக்களால் தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவரும் இனம் மதம் கடந்து மலேசியர்களுக்காக சேவை செய்யும் பிரதிநிதிகளாக இருத்தல் வேண்டும் என்பதே காலத்திற்கு சிறந்த மதிப்பீடாகும். அவ்வாறு உருவானால் மட்டுமே நாம் கனவு காணும் புதிய மலேசியாவை உருவாக்க முடியும்.இவ்வாறான சூழல் உருவானால் நாட்டில் எந்தவொரு இனமும் நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் விடுப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பில்,ஜசெக மற்றும் கெஅடிலான் கட்சிகளில் இந்திய சமுதாயத்திற்கும் மக்களுக்கும் நன்கு அறிமுகமான இந்திய அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.கெஅடிலானை பொருத்தமட்டில் கட்சியில் அதிகமான இந்திய தலைவர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் சிவராசா,என்.சுரேந்திரன்,டாக்டர் சேவியர் ஜெயகுமார் உட்பட பலர் தனித்துவமாகவும் விளங்குகிறார்கள். இந்நிலையில்,இந்தியர்களை பிரதிநிதிக்க ஹராப்பான் கூட்டணியில் இந்திய கட்சிகள் எனும் அடையாளத்தில் ஊடுருவ சிலர் முனைவது ஹராப்பான் கூட்டணியிலும் இனவாத சிந்தனையை வித்திடுமோ எனும் அச்சம் மலேசியர்களிடையே மேலோங்கியுள்ளது.

அன்மையில்,ஹராப்பான் கூட்டணியில்,இரு இந்திய கட்சிகள் இந்தியர்களின் வாக்குகளை கவர வியூக பங்காளிகளாக செயல்படும் என துன் மகாதீர் கூறியிருப்பது இனவாத சிந்தனைக்கு வித்திடுமோ எனும் ஐயம் எழுந்துள்ள நிலையில் இனவாதம் அற்ற அனைத்து இனங்களும் கலந்த ஒரு அரசாங்கமும் கூட்டணியும் தான் இன்றைய சூழலில் மலேசியாவிற்கு மலேசியர்களுக்கும் தேவை என்பதை ஆழமாக வலியுறுத்த வேண்டியும் உள்ளது.

இன்று ஹராப்பான் கூட்டணியில் இனவாத சிந்தனையோடு சில கட்சிகள் ஊடுருவும் சூழல் ஏற்பட்டால் தேசிய முன்னணியில் ம இ கா சுமார் 60 ஆண்டுகளாக செய்து வந்த “மண்டோர்” வேலையை இவர்கள் ஹராப்பான் கூட்டணியிலும் செய்ய கூடும் என இந்தியர்களே கருதுகிறார்கள்.நாங்கள் இந்தியர்களின் பிரதிநிதி என முழக்கம் செய்யும் ஹராப்பான் கூட்டணியை ஆதரிக்கும் கட்சிகள் முதலில் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் அவர்களின் ஆற்றலையும் திறனையும் வெளிப்படுத்த வேண்டும்.அவர்களின் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும்.அதன் பின்னரே அவர்களுக்கு கூட்டணியில் இடம் அளிப்பதும் மற்ற வாய்ப்புகளை வழங்குவதும் குறித்து சிந்திக்க வேண்டும்.

ஹராப்பான் கூட்டணி மலேசியர்களுக்கான கூட்டணி என்பதை நிரூபிக்க இனவாத சிந்தனை மிக்க கட்சிகளுக்கு இடம் அளிக்ககூடாது.ஹராப்பான் கூட்டணி அனைத்து தரப்பு மக்களும் இனவாத போக்கில்லாமல் சிறந்த அரசியல் முன்நகர்வினை வரையறுக்க வேண்டும்.அது குறித்து ஆழமான திட்ட செயல்பாடுகளை உருவாக்க வேண்டும்.இனவாதம் நம் நாட்டின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் மட்டுமின்றி ஹராப்பான் கூட்டணியையும் அது சார்ந்த அரசாங்கத்தையும் அழித்திடும் விஷவாயு என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 14வது பொதுத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் நாம் அனைவரும் மலேசியர்களாக நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் கைகோர்த்து பயணிக்க இனவாத சிந்தனையை நம்மிடமிருந்து அகற்றி விட்டு,மலேசியர்கள் எனும் உயரிய சிந்தனையை நம் சிந்தனையில் விதைக்க வேண்டும்.சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுவது போல் நாம் புதியதொரு மலேசியாவை கட்டமைக்க வேண்மானால் இனவாதம் எனும் கிருமியை நாம் அழிக்க வேண்டும்.நாட்டின் 14வது பொதுத் தேர்தல் மலேசியர்களை சரியான இலக்கிற்கு கொண்டு செல்லும் கருவூலம்.

எனவே, இத்தேர்தலில் இனவாதத்திற்கு மலேசியர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய விவேகமான சிந்தனையோடு செயல்பட வேண்டும். இனவாதத்தை துடைத்தொழிப்போம், மலேசியர்களாக ஒன்றிணைவோம்

#கு. குணசேகரன் குப்பன்,

சிலாங்கூர் இன்று


Pengarang :