SELANGOR

உமா தேவி: இளம் தலைமுறையினர் தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறையில் ஆர்வம் காட்ட வேண்டும்

சுபாங் ஜெயா, மார்ச்24:

எஸ்.பி.எம்,டிப்ளோமா அல்லது டிகிரி கல்வியை முடித்தவர்களாக இருந்தாலும் நம் இளம் தலைமுறையினர் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்துறையில் ஆர்வம் காட்ட வேண்டும் என நாட்டின் முதல் இந்திய பெண் எல்.ஆர்.டி ஓட்டுனரான தேவி ரெங்கசாமி கோரிக்கை விடுத்தார்.

வாழ்வில் சிறந்த இலக்கை அடைவதற்கு நாட்டில் பெண்களுக்கு கல்வி மற்றும் தொழில்துறையில் பெரும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறிய தேவி தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை சார்ந்தவைகள் ஆண்களுக்கு மட்டுமில்லை.மாறாய்,அஃது இன்றைய நவீனக்காலத்தில் பெண்களின் முன்னேற்த்திற்கும் சாத்தியமானது என்றார்.

பெண்கள் சார்ந்த சிகை அலங்காரம்,முகபராமரிப்பு,பேஷஃன் வடிவமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் ஆண்கள் ஆர்வம் காட்டும் நிலையில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறை சார்ந்த துறைகளில் பெண்கள் ஆளுமை செலுத்துவதிலும் தவறேதுமில்லை என்றார்.

அவ்வகையில்,மகளிர் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிலாங்கூர் தொழில்நுட்ப திறன்கள் முன்முயற்சி மற்றும் தொழில் திட்டத்தில் ( இக்திசாஷ்) இணைந்து தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இத்திட்டத்தையும் அதன் விவேகத்தையும் ஆதரிப்பதாகவும் வரவேற்பதாகவும் கூறிய அவர் தொழில்நுட்ப திறன்கள் முன்முயற்சி மற்றும் தொழில் திட்டத்தின் மூலம் இத்துறை சார்ந்த அறிவும் ஆற்றலும் எதிர்காலத்தை உத்தரவாதம் மிக்கதாய் உறுதி செய்யும் எனும் நம்பிக்கையை விதைத்துள்ளதாகவும் கூறினார்.

சன்வே மாநாடு மையத்தில் நடைபெற்ற இக்திசாஷ் 2018 நிகழ்வில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் மாநில அரசாங்கத்தின் இந்த விவேகமான திட்டத்தையும் வாய்ப்பையும் இளம் தலைமுறையினர் கோட்டை விட்டுவிடக்கூடாது என கூறிய அவர் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்துறையில் தொடர்ந்து இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பெண்கள் வழக்கமாய் தேர்ந்தெடுக்க மறுக்கும் துறைகளை தேர்வு செய்து அதில் வெற்றியடைவது பெரும் மகிழ்ச்சியானது.மேலும்,புதிய துறையிலும் சவால் மிக்கத்துறையிலும் ஈடுபடுவதே ஒரு வகை அளாதிதான் என்றும் தேவி பெருமிதமாக கூறினார்.

எல்.ஆர்.டி இரயிலின் முதல் இந்திய பெண் ஓட்டுனரான தேவி நாள் ஒன்றுக்கு சுமார் 1200 பயணிகளை ஏற்றிச் செல்லும் கடமையினை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :