SELANGOR

கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் மிளிர்கிறது

உலுசிலாங்கூர், மார்ச் 16:

கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் சிறந்த விளங்கிடும் கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி நாட்டின் முன்மாதியான தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது. இன்றைய சூழலில் தோட்டப்புறங்களில் மாணவர்கள் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவில் இருக்கும் பட்சத்தில் கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பாலர்ப்பள்ளி மாணவர்களோடு சேர்த்து 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயணத்தை மேற்கொண்டிருப்பது பிரமிக்க வைக்கும் ஒன்றாகவே விளங்குகிறது.

கெர்லிங் தோட்டத்திலிருந்து வெறும் மூன்று மாணவர்கள் மட்டுமே அப்பள்ளிக்கூடத்திற்கு வருகை புரிந்தாலும் தோட்டத்திற்கு வெளியிலிருந்து வருகை அளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அப்பள்ளிக்கூடம் கல்வியிலும், புறப்பாட நடவடிக்கைகளிலும் மட்டுமின்றி விளையாட்டுகளிலும் மாவட்ட, மாநிலம் கடந்து தேசிய ரீதியிலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை உயிர்ப்பித்து வருவதுதான் பெரும் காரணியமாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பில் அப்பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவர்களோடு தலைமையாசிரியர் உட்பட 13ஆசிரியர்களும் பணியிலுள்ளனர். ஒரு பள்ளிக்கூடம் சிறந்து விளங்க வேண்டுமானால் மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கப்பட வேண்டும் எனும் இலக்கோடு பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் தொடர்ந்து மேற்கொண்டு முயற்சியின் பலனால் இப்பள்ளி மாணவர்களின் சாதனைகள் தேசிய ரீதியிலும் ஜொலிப்பதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கூறினார்.

மாநில அரசாங்கத்தின் உதவிகள்
இப்பள்ளியின் சிறந்த செயல்பாடுகளுக்கும் அதன் துரித வளர்ச்சிக்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மானியம் பெரும் பங்காற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படும் மாநில அரசு மானியமும் மாணவர்களுக்காக மாநில அரசு வழங்கிடும் பேருந்து கட்டண உதவித்தொகையும் தொடர்ந்து இப்பள்ளியின் வளர்ச்சியில் தனித்துவ பங்களிப்பினை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குருகுலம்

பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் போது அப்பள்ளிக்கூடம் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் என்பது இயல்பு. ஆனால், மாணவர்கள் குறைகிறார்கள் நம்மால் எதுவும் செய்ய முடியாது என சோர்ந்து விடாமல் ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறையும் போது இப்பள்ளியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பொது இயக்கங்களோடு நல்லுள்ளங்களின் துனையோடு
“குருகுலம்” பாணியில் மாணவர் எண்ணிக்கையை பெருக்கிய முதல் தமிழ்ப்பள்ளியாக கெர்லிங் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.

பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகள், குடும்ப வறுமை, ஏழ்மைநிலை பிள்ளைகளை அடையாளம் கண்டு அவர்களை தங்கும் வசதியோடு கல்வி அறிவையும் ஊட்டும் முதல் பள்ளியாகவும் கெர்லிங் தமிழ்ப்பள்ளி தனித்துவமாக விளங்குகிறது. அவ்வாறு அடையாளம் காணப்படும் பிள்ளைகளை லெம்பா பிரிங்கினில் வீட்டை வாடகைக்கு எடுத்து அம்மாணவர்களை சகல வசதிகளோடு தங்க வைத்து அவர்கள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்லும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இதனால் மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதோடு தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தையும் காப்பாற்ற முடியும் எனும் நம்பிக்கையை அப்பள்ளி சார்ந்தவர்கள் விதைத்திருக்கும் வேளையில் இத்திட்டத்தை நாடு தழுவிய நிலையில் உருவாக்கினால் மூடுவிழா காண காத்திருக்கும் தமிழ்ப்பள்ளிகளின் வாழ்வின் விடியலை ஏற்படுத்தலாம் என்பது மறுத்திட முடியாத நம்பிக்கையாக எழுந்துள்ளது. கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி இச்சாதனையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதுவொன்றும் முடியாத ஒன்றல்ல.நம் கண் முன் சான்று இருக்கிறது. ஆங்காங்கே முயன்றால் புதியதொரு விடியலை ஏற்படுத்தலாம். இந்த அரிய முயற்சிக்கு உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் கனகராஜா உறுதுணையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேற்கொண்டிருக்கும் இந்த தூரநோக்கு திட்டத்தை நாடு முழுவதும் பரவிட செய்திட வேண்டும் எனும் பரிந்துரையை அன்மையில் தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பலகலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய வாரியக்குழு பேரவையில் முன்மொழியப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி இந்நாட்டில் ஒரு தமிழ்ப்பள்ளியை மட்டும் காப்பாற்றவில்லை. மாறாய், கல்வியை தொடர முடியாத மாணவர்களின் வாழ்விலும் கல்வி சுடரை ஏற்றியுள்ளது என்பதுதான் நிஜம்.எத்தனையோ மாணவர்களின் வாழ்வில் கல்வி சுடரை ஏற்றி விட்ட கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சாதனைகள் அது உயிர்க்கொண்டிருக்கும் உலுசிலாங்கூர் தொகுதியில் தமிழினத்தின் வரலாற்றுப் பெருமையாக திகழ்கிறது என்பது இந்நூற்றாண்டின் வாழ்வியல் உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.

#கு. குணசேகரன் குப்பன்


Pengarang :