NATIONAL

நோர் ஓமாரின் சவால் சிலாங்கூர் மாநில நீர் பிரச்னைக்கு உதவாது

ஷா அலாம்,மார்ச்19:

சிலாங்கூர் மாநில நீர் விவகாரம் தொடர்பில் நேரடி விவாதத்திற்கு மாநில மந்திரி பெசாருக்கு சவால் விடுத்திருக்கும் தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ நோர் ஓமாரின் இச்செயல் எவ்வகையிலும் இப்பிரச்னைக்கு உதவிடாது.மாறாய்,தேசிய ரீதியில் இன்று நாட்டில் நிலவிடும் பிரச்னைகளை திசைதிருப்பும் முயற்சிதான் நோர் ஓமாரின் இச்சவால்.

அம்னோ தேசிய முன்னணி தேசிய நிலையில் விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்னைகளை மூடி மறைக்கவும் திசைதிருப்பவும் நோர் ஓமார் இவ்வாறு செய்வது அம்னோவின் வழக்கமான பாணிதான்.

அன்மையில் ஏற்பட்ட நீர் பிரச்னைக்கு மாநில அரசாங்கம் விவேகமான முறையில் கையாண்டிருந்தும் நாடாளுமன்றத்தில் இப்பிரச்னையை விவாதம் செய்வதையே தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழக்கமானதாய் இருந்ததோடு அவர்களின் செயல் நாட்டில் சிலாங்கூர் மாநிலம் மட்டுமே இருப்பது போலவும் தோற்றத்தை ஏற்படுத்தியது.நாடாளுமன்றம் சிலாங்கூர்
விவாத மேடையாய் உருவானது.

சிலாங்கூர் நீர் விவகாரம் தொடர்பில் இதற்கு முன்னர் மாநில மந்திரி பெசார் தெளிவான விவாதத்தை முன் வைத்து விட்டார்.குறிப்பாக சிலாங்கூர் நீர் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து ( ஸ்பிளாஷ்) மின்சாரம்,பசுமை தொழிநுட்பம் மற்றும் நீர் அமைச்சிடமிருந்து கையகப்படுத்துவம் அதில் அடங்கும்.இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை வெளிப்படையான பதில் எதுவும் இல்லை.

ஸ்பிளாஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம் சுதந்திரமான மதிப்பீடு குறித்து கேள்வி எழுப்பிய போது வழக்கம் போல் மந்திரி பதில் அளிக்க மறுத்துவிட்ட நிலையில் பலமுறை மந்திரி பெசார் இது குறித்து கேட்டும் பதில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் வியப்பான விஷயம் என்னவெனில் சிலாங்கூர் நீர் விவகாரத்தை எழுப்பியது வேடிக்கையானது.1எம்டிபி விவகாரத்தால் நாட்டின் நற்பெயர் உலக அரங்கில் கலங்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு இல்லாத நிலையில் அவர் சிலாங்கூர் நீர் விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பியது நகைப்பிற்குரியது.1எம்டிபி விவகாரத்தில் நாட்டின் பிரதமர் கேலிக்கை பொருளாய் இருப்பதை சமூக ஊடகங்களில் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

இன்று சிலாங்கூரில் ஏற்பட்ட நீர் பிரச்னைக்கு இதற்கு முந்தைய தேசிய முன்னணியின் மாநில அரசாங்கத்தின் தவறுதான் பெரும் காரணியம்.அம்னோ தேசிய முன்னணியின் தவறான நிர்வாகத்திறனும் அலட்சியப் போக்கும் தான் இதற்கு காரணம்.நீர் செயல்பாட்டை தனியார்மையமாக்கி தங்களுக்கு வேண்டிய கூஜாதூக்கிகளுக்கு அதனை ஒப்படைத்ததே இதற்கு காரணம்.

இது டான்ஸ்ரீ ஓமாருக்கு தெரியாதா?அவரும் அன்றைய அம்னோ தேசிய முன்னணியின் ஒரு அங்கம் தானே.அன்றைய காலக்கட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பாதவர்கள் இன்றைக்கு கேள்வி எழுப்புவது வேடிக்கையானது.தனியார்மையமாக்கிய போது நோர் ஓமார் வாய் திறக்காதது ஏன்?தனியார் மையமாக்கியதில் நோர் ஓமாருக்கு பங்குகள் எதுவும் உண்டோ?

நோர் ஓமாருக்கு அக்கறையில் இருக்கும் கிருமிகள் கண்ணுக்கு தெரியுது.ஆனால்,கண் முன்னே இருக்கும் யானை அவர் கண்ணுக்கு தெரியாதது வியப்புதான்.

நாட்டில் தற்போது எழுந்துள்ள 1எம்டிபி விவகாரம் பெரும் தலைவலியாய் எழுந்துள்ளது.நாட்டின் கடன் தலைமுறை தாண்டி மலேசியர்களை வதைக்கும் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது.மக்களை வாட்டி வதைக்கும் நாட்டின் கடன் சுமையையும் பிரச்னையையும் மூடி மறைக்க சிலாங்கூர் நீர் விவகாரத்தை ஊதி பெரிதாக்குவதும் அதனை அம்னோ தேசிய முன்னணி ஊடகங்கள் பெரிதாக்குவதும் நாட்டின் 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு அவர்கள் மேற்கொள்ளும் அரசியல் நாடகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பாக்காத்தான் தலைமைத்துவத்தின் கீழ் சிலாங்கூர் மாநில அரசு நிலவி வரும் நீர் பிரச்னைக்கு நன் தீர்வினை ஏற்படுத்துவதில் மிகவும் சிரத்தை எடுத்து விவேகமாய் கையாண்டு வருகிறது.அதன் விளைவால் மாநிலத்தின் நீர் சேமிப்பு விழுகாடு 3 முதல் 5 விழுகாடு வரை சிறந்த நிலையை எட்டியுள்ளதோடு அடுத்தாண்டு இறுதியில் அஃது 11 விழுகாடாய் உயரும் என்பது சாத்தியமானது.ஆனால்,மத்திய அரசு இந்த நீர் விவகாரத்தில் எவ்வித உதவியையும் செய்திடாமல் அரசியல் நோக்கத்திற்காக தொடர்ந்து சிலாங்கூர் மாநில அரசை கலங்கப்படுத்தும் ரீதியில் பொய்யான தகவல்களை பரப்பும் செயலில் மட்டுமே முனைந்து வருகிறது.

உண்மையாகவே நோர் ஓமார் சிலாங்கூர் மக்களுக்கு உதவிட எண்ணம் கொண்டிருந்தால் ஸ்பிளாஸ் நிறுவனத்தை கையாண்டதன் மூலம் “கெத்த்தா” விற்கு கிடைத்த சுயமதிப்பீட்டை தெரிவிக்க முனைய வேண்டும்.அதன் மூலம் மாநில அரசாங்கம் அதன் தொடர் நடவடிக்கையினை மேற்கொள்ள வழிகோலும்.அதை விடுத்து சூழ்ச்சியால் சிலாங்கூர் வாழ் மக்களுக்கு அநியாயம் செய்யக்கூடாது.இதற்கு நோர் ஓமாருக்கு துணிச்சல் இருக்கா என்று சவால் விடுகிறேன்.

மேலும்,நோர் ஓமார் உண்மையிலேயே நேர்மையான தன்மையை கொண்டிருந்தால் நாடாளுமன்றத்தில் 1எம்டிபி விவகாரத்தை விவாதிக்க வழிசெய்ய வேண்டும்.அதுதான் நியாயமானது.இவ்விரு சவால்களையும் நோர் ஓமார் ஏற்றுக் கொண்டால் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நோர் ஓமாரின் சவாலை ஏற்றுக் கொள்ள பரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளது.

*சுஹாய்மி ஹஜி ஷஃபி*
மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர்
ஸ்ரீமுடா சட்டமன்ற உறுப்பினர்


Pengarang :