NATIONAL

ஹிண்ட்ராப் & மீரா கட்சிகள் பாக்காத்தானுக்கு இந்தியர்களின் வாக்குகளை பெற்றுத் தருமா?

துன் மகாதீருக்கு திறந்த மடல்

வணக்கம்,

மீண்டும் பிரதமராக வாய்ப்பு அளித்தால் மலேசிய இந்தியர்களின் இத்தனைக் கால பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பதாக தாங்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதி மலேசிய இந்திய சமுதாயத்தின் மீது தங்களின் பரிவையும் அக்கறையையும் புலப்படுத்துகிறது. அதனை வரவேற்கிறேன்.

மறுமலர்ச்சி சிந்தனையோடு நாங்கள் களமிறங்கியது அம்னோ தேசிய முன்னணி இதுநாள் வரை மேற்கொண்டு வந்த இனாவத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே என்பதை நினைவுப்படுத்த வேண்டியுள்ளது.அவ்வகையில்,துன் மகாதீரும் பெர்சத்துவை சார்ந்த அவரது சகாக்களும் ஹராப்பான் கூட்டணியில் இணைந்தால் நாட்டின் 14வது பொதுத் தேர்தலோடு அம்னோ தேசிய முன்னணிக்கு முடிவுக்கட்டி விடலாம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் கூட. ஆனால்,வேதமூர்த்தியின் தலைமையிலான
ஹிண்ட்ராஃப் கட்சியும் மீரா எனப்படும் சிறுப்பான்மை உரிமை கட்சியும் இந்தியர்களின் வாக்குகளை கவர்ந்திழுக்கும் என அன்மையில் துன் மகாதீர் கூறியிருப்பது ஹராப்பான் கூட்டணியும் இனவாதம் எனும் வலையில் சிக்கிக் கொண்டதை போல் உணரப்படுகிறது.

ஹராப்பான் கூட்டணியில் அங்கத்துவம் பெற்றுள்ள கெ அடிலான் மற்றும் ஜசெக கட்சியில் இந்திய சமுதாயத்திற்கும் மக்களும் நன்கு அறிமுகமான இந்திய தலைவர்கள் அதிகமாகவே உள்ளனர்.மற்ற கட்சிகளோடு ஒப்பிடுகையில் கெ அடிலான் கட்சியில் அதிகமான இந்தியர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிவராசா,என்.சுரேந்திரன், டாக்டர் சேவியர் ஜெயகுமார் ஆகியோர் எதிர்கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி அம்னோ தேசிய முன்னணியினர் மத்தியிலும் தனித்துவமாய் விளங்குகிறார்கள். மேலும்,கெ அடிலான் கட்சியில் கிளை முதல் கட்சியின் உயர்மட்டம் வரை நிறைய ஆற்றல் மிக்க இந்தியர்கள் உள்ளனர் என்பதையும் குறிப்பிடதான் வேண்டும்.

இந்நிலையில், ஹிண்ட் ராஃப் மற்றும் மீரா ஆகிய கட்சிகளால் இந்திய சமுதச்யத்தின் வாக்குகளை ஈர்க்க முடியும் என்பது அர்த்தமற்றது என்பதை நினைவுறுத்துகிறேன். அவர்களால் எவ்வித செயல்பாட்டையும் முன்னெடுக்க முடியாது.அஃது சாத்தியமற்றது. இந்திய சமுதாயம் அம்னோ தேசிய முன்னணியின் ஊழல்வாதத்தையும் இனவாதத்தையும் நன்கு உணர்ந்து விட்டனர்.அவர்களுக்கு ஹராப்பான் கூட்டணியில் மற்றுமொரு ம இ கா தேவையில்லை.தேசிய முன்னணியில் 60 ஆண்டுகளால் இந்திய சமுதாயம் ம இ காவை நம்பி ஏமாந்தது போதும்.ஹராப்பான் கூட்டணியிலும் ம இ கா போல் ” மண்டோர்” கட்சிகள் அவசியமில்லை.நாம் இப்போது இன ரீதியிலான அரசியலை கடந்து விட்டோம்.மலேசிய இந்தியர்களும் இனவாத அரசியலை வெறுக்கிறார்கள்.நமக்கு தேவை பல்லின அரசியல்.அதனை உயிர்க்கொள்வதில் ஹராப்பான் கூட்டணி தெளிவான வரையறையை கொண்டிருக்க வேண்டும்.7 விழுகாடு ஜனத்தொகையை கொண்டிருக்கும் இந்தியர்கள் ஹிண்ட் ராஃப் மற்றும் மீரா ஆகிய கட்சிகளால் எந்தவொரு நன்மையையும் அடையப் போவதில்லை என்பதை நன்கு உணர்ந்துள்ளனர்.

எனவே,ஹராப்பான் கூட்டணியின் தலைவராக விளங்கிடும் துன் மகாதீர் ஹராப்பான் கூட்டணியில் ” சந்தரப்பவாதி”களுக்கு கூட்டணியில் இடம் அளிக்காமல் அவர்களை முதலில் அவர்களின் ஆற்றலையும் திறனையும் வெளிப்படுத்துமாறும் அதனை நிரூபிக்குமாறும் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் அவர்கள் தங்களின் ஆற்றலை நிரூபிக்க வேண்டும்.அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிப்பது ஏற்புடையதல்ல என தெரிவிக்க விரும்புகிறோம்.ஹராப்பான் கூட்டணி அனைத்து தரப்பு மக்களும் இனவாத போக்கில்லாமல் சிறந்த அரசியல் முன்நகர்வினை வரையறுக்க வேண்டும்.அது குறித்து ஆழமான திட்ட செயல்பாடு உருவாக்க வேண்டும்.நாம் புத்ரா ஜெயாவை கைப்பற்றினால் எவ்வாறு இனவாதம் அற்ற அரசை உருவாக்குவது என்பதை சிந்திக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இறுதியாக, துன் மகாதீருக்கு நாங்கள் இனவாதத்தை வெறுக்கிறோம். ஹராப்பான் கூட்டணியில் இனவாதம் ஊடுருவக் கூடாது என்பதை நினைவுறுத்துகிறோம்.

கு.குணசேகரன் குப்பன்
சிலாங்கூர் மாநில கெ அடிலான் கட்சியின் தகவல் பிரிவு துணைத்தலைவர்.


Pengarang :