NATIONAL

14-வது பொதுத் தேர்தல் : நடுநிலையான பார்வையாளர்களை எஸ்பிஆர் நியமிக்க வேண்டும்

கோலா லம்பூர், மார்ச் 7:

மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலை பார்வையிட அனைத்துலக நாடுகளில் இருந்து நம்பிக்கையான மற்றும் நடுநிலையான பார்வையாளர்களை கொண்டு வர வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாசிம் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்பில் வான் அஸிஸா இவ்வாறு தெரிவித்தார். எஸ்பிஆரின் அறிக்கையில், காமன்வெல்த் மற்றும் ஆசியான் நாடுகளை சேர்ந்த பார்வையாளர்களை கொண்டு வரும் எண்ணத்தை வரவேற்பதாக தெரிவித்தாலும் 13-வது பொதுத் தேர்தலில் நடந்த தவறுகளை மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் கூறுகையில், கெஅடிலான் கட்சியின் தலைவருமான வான் அஸிஸா, மியான்மர் மற்றும் கம்போடியா போன்ற சர்ச்சைக்குரிய நாடுகளை பார்வையாளர்களாக அழைப்பு விடுத்ததை கேள்வி எழுப்பினார். மியான்மர் நாட்டின் மனித உரிமை மீறல்கள் மிக மோசமான சூழ்நிலையில் இருந்து வருகிறது. கம்போடியாவில் ஹூங் சென் தலைமையில் எதிர்க்கட்சிகளை நசுக்கி, ஜனநாயகத்தை கொன்று விட்டார் என்று கடுமையாக சாடினார். ஆகவே, நம்பகத்தன்மை கொண்ட அனைத்துலக நாடுகளில் இருந்து நம்பிக்கையான பார்வையாளர்களை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V-இன் அரச உரையின் மீது ஆதரித்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

பெர்மாத்தாங் பாவோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அஸிஸா மேலும் பேசுகையில் மலேசிய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தை கலைத்தவுடன் நடுநிலையான இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். இது துங்கு அப்துல் ரஹ்மான் காலத்தில் நடைமுறையில் இருந்ததாக கூறினார். இந்த இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தினால் நடுநிலையான முடிவுகளை தேர்தல் சமயத்தில் நாம் எதிர் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.

#தமிழ் பிரியன்


Pengarang :