NATIONAL

ஐடிஇ: பாக்காத்தானுக்கு, சிலாங்கூர் மாநில மக்களின் ஆதரவு 56% ஆக உள்ளது !!!

ஷா ஆலம் , ஏப்ரல் 25:

டாரூல் எசான் மையம் (ஐடிஇ) நடத்திய ஆய்வில் எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு சிலாங்கூர் மாநில மக்களின் ஆதரவு 56% ஆக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்த தகவலை ஐடிஇ-வின் துணைத் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் ரிஸூவான் ஓத்மான் தெரிவித்தார். கடந்த 21-இல் இருந்து 23 ஏப்ரல் வரை நடத்தப்பட்ட ஆய்வில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தை தற்க வைக்க முடியும் என்று விவரித்தார்.

”  ஐடிஇ நடத்திய ஆய்வில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு 56% ஆக உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 49% ஆக இருந்தது. இந்த ஆய்வில் பாக்காத்தான் அரசாங்கத்திற்கு சிலாங்கூர் மாநில மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கிறது,” என்று சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) ஏற்பாடு செய்த ‘ 14-வது பொதுத் தேர்தல்: ஜனநாயக கருத்தரங்கம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் அம்னோ தேசிய முன்னணி 30% ஆதரவையும் பாஸ் கட்சியினர் 13% மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் செல்வாக்கு 65% ஆக உள்ளது பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வெற்றிக்கு அச்சாணியாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகள் அனைத்தும் கெஅடிலான் கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவது வெற்றியை உறுதி செய்யும் என்று ரிஸூவான் ஓத்மான் தெரிவித்தார்.


Pengarang :