NATIONAL

மக்களின் எழுச்சியே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்!!

நிபோங் தெபால்,ஏப்23:

அம்னோ தேசிய முன்னணியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் சுதந்திரமும் கிடைக்க நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் மாபெரும் அரசியல் மாற்றம் நிகழ வேண்டும்.அது மக்கள் எழுச்சியால் மட்டுமே சாத்தியம் என்றும் நினைவுறுத்தப்பட்டது.

சிலாங்கூர் மற்றும் பினாங்கு வாழ் மக்கள் நன் நிலையிலும் சிறந்த வாழ்வாதாரத்தை நோக்கியும் பாக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் முன்னேறிக் கொண்டுள்ளனர் என குறிப்பிட்ட டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இவ்விரு மாநிலமும் மக்கள் நலன் மீது கவனமும் பரிவும் கொண்ட மாநிலமாகவும் விளங்குவதாக கூறினார்.

இவ்விரு மாநிலங்களை நாம் கொண்டிருந்தாலும் இன்றைய சூழலில் மக்களின் கழுத்தை நெறிக்கும் ஜி.எஸ்.டி வரியை அகற்றுவதற்கு அஃது போதுமானதல்ல.புத்ரா ஜெயாவை கைப்பற்றினால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று கூறினார்.

ஜி.எஸ்.டி மக்களின் வாழ்வினை பொருளாதார ரீதியில் பெரும் சுமையை ஏற்படுத்தி வருகிறது.நாட்டின் கடன் பெரும் அளவில் அதிகரித்திருக்கும் நிலையில் அஃது நாட்டை திவால் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதை.அதனை சமாளிக்கவே ஜி.எஸ்.டி வரி வசூல் செய்யப்படுகிறது.இம்மாதிரி நாட்டை முறையாக வழிநடத்த முடியாமல் மக்களுக்கு சுமையை கொடுக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

இன்றைக்கு நாட்டில் மக்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு துன்பமும் தொல்லையும் அம்னோ தேசிய முன்னணியின் திறனற்ற அரசாங்கத்தின் செயல்பாடுகளே காரணம் எனவும் கூறிய சிலாங்கூர் மந்திரி பெசார் மக்கள் விவேகமாய் சிந்தித்து அம்னோ தேசிய முன்னணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஜி.எஸ்.டி இல்லையென்றால் நாடு திவாலாகி விடும் எனும் அம்னோ தேசிய முன்னணியின் வாதம் அறிவுக்கு ஒவ்வாதது.ஜி.எஸ்.டி இல்லாத சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலம் சிறந்த முறையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

ஜி.எஸ்.டி வசூலிக்காத காரணத்தினால் சிலாங்கூர் மாநிலம் சுமார் வெ.320மில்லியனை இழந்திருந்தாலும் மாநிலத்தின் வளர்ச்சியும் மேம்பாடு துளியும் பாதிக்கவில்லை என்றார்.

சிலாங்கூர் வாழ் மக்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறார்கள்.மாநில வளங்களையும் வருமானங்களையும் மக்களோடு பகிர்ந்துக் கொள்வதே அதற்கு பெரும் சான்று என்றார்.அதே போக்கினை பினாங்கு அரசாங்கமும் கடைபிடிப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலைதான் இவ்விரு மாநிலத்தையும் சிறந்த நிலைக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் கூறினார்.

இவ்வட்டாரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அஸ்மின் அலி இந்நிகழ்விற்கு பல்லினத்தை சார்ந்தவர்கள் ஒற்றுமையாகவும் ஒரே சிந்தனையோடும் களமிறங்கியிருப்பது நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணிக்கு விடைகொடுக்கும் காலம் நெருங்கி விட்டதை நன்கு புலப்படுத்துவதாகவும் நம்பிக்கையோடு கூறினார்.


Pengarang :