SELANGOR

ஷூராய்டா:இந்தியர்களின் அரசியல் விழிப்புணர்வு நாட்டின் அரசியல் மாற்றத்தை உருவாக்கும்

அம்பாங், ஏப்ரல் 17:

நாட்டின் 14வது போதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் வேளையில் இந்தியர்களின் அரசியல் விழிப்புணர்வு நாட்டின் அரசியல் மாற்றத்திற்கே வித்திடும் என அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஷூராய்டா பிந்தி கமாரூடின் தெரிவித்தார்.

சிறந்த அரசாங்கத்தையும் மக்கள் பிரதிநிதிகளையும் தேர்வு செய்யும் ஆற்றலும் விவேகமும் இந்தியர்கள் மத்தியில் உயிர்தெழுந்திருப்பதாகவும் கூறிய அவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டங்களையும் அதன் செயல்பாடுகளையும் திறந்த மனதோடு வரவேற்பதாகவும் கூறினார்.

அம்பாங் தொகுதியில் கடந்த இரு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தனது இங்குள்ள இந்தியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தனித்துவமாய் இருந்ததாகவும் கூறினார்.இங்குள்ள இந்தியர்கள் அன்பாய் பழகக்கூடியவர்கள்,அவர்கள் என்னையும் அவர்கள் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார்கள்.அவர்களின் அன்பில் சில வேளைகளில் நான் நெகிழ்ந்து போவதும் உண்டு என்றார்.

அம்பாங் தொகுதியை பொருத்தமட்டில் மாநில அரசாங்கமும் சரி,நாடாளுமன்ற உறுப்பினராக நானும் மக்களுக்கானபல்வேறு சேவைகளையும் திட்டங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வந்துள்ளோம் எனவும் கூறிய ஷூராய்டா சேவை அங்கீகாரமே 2008ஆம் ஆண்டை காட்டிலும் 2013இல் அம்பாங் தொகுதியில் 13,278 வாக்குகள் வித்தியாசத்தில் எனது வெற்றுஇ இருந்தது என்றும் நன்றியோடு கூறினார்.

தனது சேவையாலும் மக்களோடு அன்பாகவும் நெருக்கமாகவும் பழகும் இயல்பாலும் அம்பாங் வாழ் மக்களிடையே தனித்துவ செல்வாக்கை பெற்று விளங்கும் மாண்புமிகு ஷுராய்டா பிந்தி கமாரூடின் “சிலாங்கூர் இன்று”க்காக கீழ்கண்டவாறு தனது மனவோட்டங்களை பகிர்ந்துக்கொண்டார்:

கேள்வி:அரசியல் ஈடுபாடு எப்படி உருவானது?

பதில்: கெஅடிலான் கட்சியில் இன்று இருப்பவர்களில் பெரும்பான்மையோர் வேறு கட்சிகளிலிருந்து கெஅடிலான் உருவானபோது இதில் உறுப்பியம் பெற்றவர்கள்.ஆனால்,எனது முதல் அரசியல் கட்சியே கெஅடிலான் தான்.எனது அரசியல் பிரவேசம் ஒரு விபத்து போல்தான் நிகழ்ந்தது.கெஅடிலான் கட்சி உருவான போது 1999இல் பொதுத் தேர்தலில் போட்டியிட கட்சி ஆயத்தமான போது அக்கட்சியோடு பயணம் செய்த எனக்கு 2008ஆம் ஆண்டில் அம்பாங் நாடாளுமன்றத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிட்டையது.

கேள்வி:2008ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் 3,676 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தாங்கள் 20013இல் 13,278 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது எப்படி?

பதில்:2008இல் நான் போட்டியிடும் போது என்னை இங்குள்ள பலபேருக்கு நன்கு அறிமுகம் இல்லை.நாடு முழுவதும் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் மாற்றம் எனும் ஒரே இலக்கோடு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்தனர்.ஆனால்,2013இல் அதிக பெரும்பான்மை கிடைக்க எனது சேவையும் மக்களுக்கான எனது போராட்டங்களும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் தான் பெரும் காரணம்.2013ஆம் ஆண்டில் நான் பெற்ற வெற்றி மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி எனலாம்.

கேள்வி:அம்பாங் நாடாளுமன்றத்தில் இந்தியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் எவ்வாறு உள்ளது?

பதில்:அம்பாங் நாடாளுமன்றத்தை பொருத்தமட்டில் இந்தியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கெஅடிலான் கட்சிக்கும் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் பெரும் அளவு இருப்பதை மறுத்திட முடியாது.மாநில அரசாங்கத்தின் திட்டங்களில் அவர்கள் காட்டி வரும் ஆர்வம் அதற்கு பெரும் சான்றாக விளங்குகிறது.

கேள்வி:சிலாங்கூர் மாநில அரசாங்கம் குறித்து விவரிக்கவும்.

பதில்: சிலாங்கூர் வாழ் மக்கள் மட்டுமின்றி நாட்டின் ஒவ்வொரு மாநில மக்களும் விரும்பும் மாநில அரசங்கமாக டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கம் விளங்குகிறது.அதுமட்டுமின்றி,சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்ற மாநிலங்களுக்கும் தேசிய முன்னணியின் மத்திய அரசாங்கத்திற்கும் கூட முன்மாதிரியாகவே திகழ்கிறது.

கேள்வி:இந்தியர்களின் அரசியல் விழிப்புணர்வு எவ்வாறு உள்ளது

பதில்: கடந்தக்காலங்களில் தேசிய முன்னணியின் காலத்தில் ம இ கா இந்தியர்களின் உரிமையையும் நலனையும் காக்க தவறி விட்டது.ஆனால்,2008ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசியல் விழிப்புணர்வில் இந்தியர்களின் செயல்பாடுகள் விவேகமான நிலைக்கு உயர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.இனியும் ம இ காவும் தேசிய முன்னணியும் இந்தியர்களை உணர்ச்சியாலும் சலுகைகளாலும் கவர்ந்து விடலாம் என எண்ணினால் அஃது இனியும் முடியாது.இந்தியர்கள் எது நல்லது?எது தேவையானது என்பதை நன்கு சீர்த்தூக்கி பார்க்கத் தொடங்கி விட்டனர்.அவர்களின் அரசியல் விழிப்புணர்வு நாட்டின் அரசியல் மாற்றத்திற்கே பெரும் பங்களிப்பாக விளங்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி: மகளிர் மேம்பாடும் வளர்ச்சியும் குறித்து கூறவும்.

பதில்: மலேசியாவை பொருத்தமட்டில் தேசிய முன்னணியின் ஆட்சியில் மகளிர் வளர்ச்சியும் மேம்பாடும் இலக்கு எதுவுமின்றி உள்ளது.ஆனால்,கெஅடிலான் கட்சியில் மகளிர் உரிமைக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.சிலாங்கூர் மாநில அரசாங்கத்திலும் மகளின் நலனுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் இருப்பதையும் நாம் மறந்திட முடியாது.மகளிர் தொழில்திறன் பயிற்சிகள்,அன்புத்தாய் விவேக அட்டை (கீஸ்) மற்றும் மெமோகிராம் இலவச மார்பகபரிசோதனை என பல்வேறு திட்டங்களை அது உள்ளடக்கியுள்ளது.

கேள்வி:அம்பாங் மக்கள் எதிர்நோக்கிய பிரச்னைகளும் தீர்வுகள் என்ன?

பதில்:சிலாங்கூர் மாநிலம் தேசிய முன்னணியின் வசமிருந்த போது இத்தொகுதியில் பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தது.வீட்டுப் பிரச்னை,நிலப்பிரச்னை உட்பட பல அதில் அடங்கும்.இத்தொகுதியை 2008இல் கைப்பற்றிய போது மாநில அரசாங்கமும் நம்மிடம் இருந்த காரணியத்தால் கம்போங் பெரெம்பாங்  மக்களுக்கு இலவச வீடுகள் கிடைக்க வழிசெய்தோம்.அம்னோ தேசிய முன்னணி பெரெம்பாங் மக்களின் பிரச்னையை கொஞ்சமும் செவிமடுக்காமல் அவர்கள் தங்கியிருந்த வீடுகளை உடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.இத்தொகுதியில் மக்கள் எதிர்நோக்கிய நிலப்பிரச்னைகளுக்கு தீர்வு கண்டதோடு நிலப்பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளதோடு சிஎப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுள்ளேன்.மேலும், இங்கு மக்கள் எதிர்நோக்கிய வீட்டுப் பிரச்னைகளுக்கு நன்முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி,அம்பாங் மக்களின் வசதிக்காகவும் அவர்களின் பயன்பாட்டிற்காகவும் இங்கு நீரழிவு சுத்திகரிப்பு மையத்தையும் உருவாக்கியுள்ளேன்.

கேள்வி:இந்தியர்களின் வாழ்க்கை தரம் இங்கு எவ்வாறு உள்ளது

பதில்:இந்தியர்களின் வாழ்க்கை தரம் குறித்து விவரிகையில் அவர்கள் இங்குள்ள மலாய்காரர்கள் மற்றும் சீனர்களோடு ஒப்பிடுகையில் ஏழ்மை நிலையில் பெரும் இடைவெளியோடு உள்ளனர்.தேசிய முன்னணியும் ம கா வும் அம்பாங் தொகுதியில் இந்தியர்களை புறக்கணித்தே வைத்திருந்ததிற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டு.இங்கு இனம் ,மதம் கடந்து நாம் மலேசியர்களாக கரம்கோர்க்கும் நிலையில் இந்த ஏழ்மைநிலை இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.மலாய்காரர்கள் மற்றும் சீனர்களோடு இந்தியரகளும் அவர்களுக்கு நிகராக உயர வேண்டும் என்பதே எனது இலக்கு.கடந்தக்காலங்களோடு ஒப்பிடுகையில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இன்றைய பல்வேறு திட்டங்கள் இந்தியர்களின் வாழ்க்கை  தரத்தை மேம்படுத்த வழிசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி:மாநில அரசாங்கத்தின் பரிவு மிக்க நலத்திட்டங்கள் (ஐபிஆர்) குறித்தும் இந்தியர்களின் வரவேற்ப்பு குறித்தும் கூறவும்?

பதில்:மந்திரி பெசாரின் தூரநோக்கு சிந்தனையில் உதிர்த்த பரிவு மிக்க மக்கள் நலத்திட்டங்கள் இன்றைய சூழலில் மக்களின் நிதிசுமையையும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பெரும் உதவியாக விளங்குகிறது.இலவச பேருந்து சேவை தொடங்கி அதன் ஒவ்வொரு திட்டமும் மக்களின் வாழ்க்கை செலவினத்தை குறைக்கவும் பெரும் பங்காற்றுகிறது.ஒரு சிறந்த அரசாங்கத்திற்கு முன்மாதிரியாக விளங்கும் சிலாங்கூர் அரசாங்கத்தின் ஒவ்வொரு ஐபிஆர் திட்டமும் இந்திய சமுதாயத்தின் நன் மதிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மலாய்காரர்கள் மற்றும் சீனர்களை காட்டிலும் மாநில அரசாங்கத்தின் இத்திட்டத்தில் இந்தியர்களே அதிகமாக பதிந்துக் கொண்டு நன்மை அடைகிறார்கள்.மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களை நன்கு புரிந்துக் கொண்டு அதனை பயன்படுத்திக் கொள்வதில் இந்தியர்கள் தனித்துவமாய் விளங்குகிறார்.

கேள்வி:சிலாங்கூர் இன்று தமிழ்ப்பத்திரிக்கை குறித்து தங்களின் பார்வை?

பதில்:மாநில அரசாங்கத்தின் திட்டங்களையும் அதன் செயல்பாடுகளையும் தெளிவாகவும் எளிமையாகவும் மக்கள் புரிந்துக் கொள்ளும் வகையிலும் மக்களிடையே கொண்டு செல்லும் அரும்பணியை சிலாங்கூர் இன்று மேற்கொள்வதை உணர முடிகிறது.சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வெற்றிக்கு சிலாங்கூர் இன்றும் துணை நிற்பது பெருமிதமாக இருப்பதோடு அதனை சரியான இலக்கிற்கு கொண்டு செல்லும் அதன் ஆசிரியர் செகு சேகர் மற்றும் அவர் தம் குழுவிற்கு இவ்வேளையில் வாழ்த்து சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

கேள்வி:நாட்டின் 14வது பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.இந்நிலையில் இந்திய சமுதாயத்திற்கு தங்களின் ஆலோசனை என்ன

பதில்:இந்திய சமுதாயத்தினர் விவேகமாக சிந்திக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.அவர்களுக்கு ஆலோசனைகளை கூற வேண்டிய அவசியம் இல்லை.சிறந்த அரசாங்கத்தையும் சிறந்த மக்கள் பிரதிநிதிகளையும் தேர்வு செய்வதில் அவர்களின் விவேகம் தனித்துவமானது.இருந்த போதிலும் மலேசியாவை காப்பாற்றவும் தொடர்ந்து சிலாங்கூர் அரசாங்கத்தை தற்காத்துக் கொள்ளவும் அம்பாங் வாழ் இந்தியர்கள் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை தேர்வு செய்ய வேண்டும்.சிறந்த அரசாங்கம் உருவாக மக்களின் விவேகமான முடிவே சாத்தியமானது.இந்தியர்களின் ஆதரவு நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 80 விழுகாடுக்கும் அதிகமாக இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.


Pengarang :