NATIONAL

மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கிய ஜிஎஸ்டிக்கு மூடுவிழா!!

தேர்தலில் மக்களுக்கு  கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஹராப்பான் அரசாங்கம்.
கடந்த 2015இல் ஏப்ரல் 1ஆம் தேதி அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் இதற்கு முன்னர் நாட்டில் அமலில் இருந்து வந்த எஸ்எஸ்டி வரியை அகற்றி விட்டு ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு பல்வேறு தரப்பிடமிருந்து குறிப்பாக ஹராப்பான் கூட்டணியிடமிருந்தும் மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால்,மக்களின் குரலை அலட்சியம் செய்ததோடு பிடிவாதமாக அன்றைய அம்னோ தேசிய முன்னணி ஜிஎஸ்டியை அமல்படுத்தியது.

ஜிஎஸ்டி அமல்படுத்தியது முதல் நாட்டில் மக்கள் பெரும் சுமையை எதிர்நோக்கினார்கள்.பொருளாதார ரீதியில் மக்கள் ஒவ்வொரு நாளும் பெரும் சிரமத்தை எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது.அதுமட்டுமின்றி,மக்களின் அன்றாட வாழ்வாதாரமும் பெரும் நரகத்தில் தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மக்கள் தொடர்ந்து ஜிஎஸ்டிக்கு எதிராக போராடிய வேளையில் ஜிஎஸ்டி இல்லையெனில் நாடு திவாலாகி விடும், ஜிஎஸ்டி மூலமே பிரிம் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றெல்லாம் முந்தைய அரசாங்கம் அறிவுக்கு ஒவ்வாத வாதத்தை முன் வைத்த வேளையில் அதன் கூட்டணியிலிருந்த ம இ கா உட்பட இதர கட்சிகளும் மனசாட்சியே இல்லாமல் தலையாட்டிக் கொண்டிருந்தனர்.

முந்தைய அரசாங்கம் அமல்படுத்திய 6% ஜிஎஸ்டி என்பது மக்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்தது என்றால் மறுப்பதற்கில்லை.இதன் மூலம் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பொருட்களின் விலையேற்றம் நடுத்தரம் மற்றும் வறுமை நிலை குடும்பங்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. வியபாரிகளுக்கும் இது பெரும் பாதிப்பாக இருந்த வேளையில் ஜிஎஸ்டியால் வியபாரத்தை கைவிட்டவர்களும் உண்டு. ஜிஎஸ்டி ஒட்டுமொத்தமாக மலேசியர்களுக்கு புற்றுநோய் போல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்று கூறுவதே மிக சரியாக இருக்கும் எனலாம்.

மலேசியாவை பொருத்தமட்டில் ஜிஎஸ்டி மிகவும் மோசமான முறையில் அமல்படுத்தப்பட்டதன் விளைவால் அதிக அளவிலான வரி ஏய்ப்பை ஊக்குவிக்கும் சூழலும் கள்ள சந்தை செயல்பாடு அதிகரிக்கும் நிலையில் அதனால் மக்களுக்கு துளியும் பயன் கிடையாது என்பதுதான் உண்மை. ஜிஎஸ்டியால் பொருட்களின் விலை குறையும் என அறிவுக்கு ஒவ்வாத கருத்தை முன் வைத்த அம்னோ அமைச்சரின் பொருளாதார சிந்தனை நமக்கு வேடிக்கையாக இருக்கும் நிலையில் ஜிஎஸ்டியால் பொருட்களின் விலை ஏற்றம் மக்களின் கருத்தை நெரித்ததை மலேசியர்கள் கண்கூடாய் பார்க்கத்தானே செய்தார்கள்.

ஜிஎஸ்டியால் பொருட்களின் விலையேற்றம் மட்டுமின்றி மலேசியர்களை வேலை இழப்பிற்கும் அஃது ஆளாக்கியது.நாட்டில் அதிகமானோர் வேலை இழக்கவும் ஜிஎஸ்டி பெரும் காரணமானது. ஜிஎஸ்டி நாட்டின் பணவீக்கத்தை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச்சென்றது.மக்களின் வாழ்க்கை செலவினம் கிடுகிடுவென உயர்ந்தது. நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களை ஜிஎஸ்டி வரி வறுமை நிலைக்கு கொண்டு சென்றது. ஆனால்,அவர்களின் வருமானம் துளியும் உயர்ந்தப்பாடில்லை.நாட்டின் பண வீக்கமும் வாழ்க்கை செலவினமும் தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே போனது என்பதுதான் இயல்பியல் உண்மை.

ஜிஎஸ்டி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்பது வெறும் கற்பனையே. மாறாய்,மக்களின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதே உண்மை.குறிப்பாக சராசரி வருமானம் பெறுவோர் ஜிஎஸ்டி வரியால் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தனர்.நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு கிளம்பியும் கண்டுக்கொள்ளாத அம்னோ அரசாங்கத்திற்கு மக்கள் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் நன்கு பாடம் கற்பித்து விட்டனர்.

விற்பனை சேவை வரி (எஸ்எஸ்டி)

>எஸ்எஸ்டி வரி மக்களுக்கு குறிப்பாக சாமானிய மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது.

>எஸ்எஸ்டி வரி ஒருமுறை மட்டுமே விதிக்கப்படும்.

>எஸ்எஸ்டி வரி பயனீட்டாளர்களுக்கு விதிக்கப்படாமல் தொழிற்சாலை நிலையில் அல்லது உற்பத்தி நிலையில் மட்டுமே விதிக்கப்படும்.

>பொருட்களை வாங்கும் பயனீட்டாளர்கள் எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை.

>எஸ்எஸ்டி வரியில் குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டுமே சேவை வரி பயனீட்டார்களுக்கு விதிக்கப்படும்.

>எஸ்எஸ்டி வரியால் மக்களின் பொருளாதார நிலையில் சீராக இருக்கும்.

>எஸ்எஸ்டி வரி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு நாட்டின் பணவீக்கத்தையும் அதிகரிக்கும்.

>பொருட்களின் விலை கிடுகிடுவென உயராது.

>மக்களிடம் பண புழக்கமும் தொடர்ந்து சரியான நிலையில் நிலைக்கொள்ளும்.

பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி)

>ஜிஎஸ்டி வரி மக்களின் பொருளாதார சுமையை அதிகரிக்கும்.

>நேரடியாக மக்களின் பணத்தை அபகரிக்கும் திட்டம்.

>பொருட்களின் விலை கட்டுப்பாடுயின்றி கிடுகிடுவென உயரும்.

>ஒவ்வொரு படிநிலையிலும் வரி செலுத்த வேண்டும்.குறிப்பாக ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் போது அல்லது இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் நிலையிலோ அது எல்லா நிலைகளையும் கடந்து மக்களிடம் வந்து சேரும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் வரி செலுத்த வேண்டும்.இந்நிலையில் அப்பொருளின் விலை உயர்ந்துக் கொண்டே போகும்.

>விவேகமான நிர்வாகத்திறன் இல்லாத அரசாங்கத்தின் தூரநோக்கு இல்லாத திட்டம்தான் ஜிஎஸ்டி.

>ஜிஎஸ்டி வரியால் கள்ளச் சந்தை அதிகரிக்கும்.இதன் மூலம் தொடர்ந்து மக்கள் ஏமாற்றப்படுவார்கள்.

>ஜிஎஸ்டி வரியால் பொருட்களின் விலை ஏற்றம் காண்பதோடு வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் மக்கள் வரி செலுத்த வேண்டும்.

>நடுத்தர மற்றும் வறுமை நிலை குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி வரி பொருளாதார ரீதியில் பெரும் அழுத்தத்தை கொடுக்கும்.

நாட்டில் எஸ்எஸ்டி வரி கடந்த 1970களில் அமல்படுத்தப்பட்டது. அன்றைய நாள் முதல் நஜிப் துன் ரசாக் நாட்டின் பிரதமராக பதவி ஏற்கும் வரை நாட்டின் பொருளாதாரமும் அதன் துரித வளர்ச்சியும் சரியான இலக்கில் தான் பயணித்தது.நஜிப் துன் ரசாக்கின் விவேகமற்ற நிர்வாகத்திறன் மற்றும் அவரது காலக்கட்டத்தில் நாட்டில் அதிகரித்த ஊழல்,லஞ்சம் மற்றும் அவரை சார்ந்தவர்களின் ஆடம்பர வாழ்க்கை முறை ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியது என்பதை மறுத்திட முடியாது. இந்நிலையில்தான் ஜிஎஸ்டி வரியை விதித்து மக்களை பொருளாதார ரீதியில் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கினார் நஜிப் துன் ரசாக்.

நாட்டின் 7வது பிரதமரான துன் மகாதீர் முகமது இதற்கு முன்னர் சுமார் 22 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்த போது நாடு மோசமான பொருளாதார சரிவினை எதிர்க்கொண்ட போதிலும் அவர் ஜிஎஸ்டி வரியை விதிக்காமல் எஸ்எஸ்டி வரியை நிலைநிறுத்தி அவரது நிர்வாகத்திறனால் நாட்டின் பொருளாதாரத்தை சரியான இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சென்றார்.

மலேசியா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஜிஎஸ்டி அவசியமில்லாத ஒன்று. இந்நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் எஸ்எஸ்டி வரியே போதுமானது. ஜிஎஸ்டி நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஒரு திட்டமாகும். ஹராப்பான் கூட்டணி மத்திய ஆட்சியை கைப்பற்றியதும் துன் மகாதீர் முகமது ஜிஎஸ்டியை ஜூன் 1ஆம் தேதியோடு அகற்றுவதாக அறிவித்தது ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.தேர்தல் கொள்கை அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் நிறைவேற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி ஜூன் 1ஆம் தேதி அகற்றப்படும் நிலையில் எந்தவொரு வியபாரியாவது பொருட்களின் விலையை உயர்த்தினலோ அல்லது அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தாலோ பொது மக்கள் உடனடியாக பயனீட்டாளர் சங்கத்திலோ அல்லது பயனீட்டாளர் அமைச்சிடமோ அது சார்ந்த இலாகாவிடமோ விரைந்து புகார் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மக்களின் பொருளாதார சுமையை அதிகரித்து, அவர்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பெரும் இன்னல்களுக்கு இட்டுச் சென்ற ஜிஎஸ்டிக்கு ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் விடை கொடுத்தது மீண்டும் மக்களின் முகங்களில் புன்னகையை மலர செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு,

கு.குணசேகரன் குப்பன்


Pengarang :