NATIONAL

மக்கள் வீடமைப்பு திட்டத்தில் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய வியூகம் ஆராயப்படும்!!

ஷா ஆலம்,ஜூலை22:

மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வீடமைப்பு மற்றும் ஊராட்சிதுறை அமைச்சிக் கொண்டிருக்கும் இலக்கிற்கு உதவும் வகையில் புதிய வியூகத்தை சிலாங்கூர் மாநில அரசு ஆராயவிருப்பதாக மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

அந்த இலக்கை எட்டுவதற்கு மாநில அரசு அதிகமான நிலத்தை ஒதுக்கிட ஆராய்ந்து வருவதாக கூறிய மந்திரி பெசார் அமிரூடின் சாஹரி அதேவேளையில் மக்கள் அனைவரும் சொந்த வீடுகளை கொண்டிருக்க அதன் விலையை நியாயமான வகையில் நிர்ணயம் செய்ய மேம்பாட்டு நிறுவனத்தோடும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.

வீடுகள் கட்டுவதிலும் அதன் எண்ணிக்கையிலும் கவனம் செலுத்திடும் அதேவேளையில் மக்கள் சொந்த வீட்டை கொண்டிருப்பது குறித்தும் நன்கு ஆராயப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

நடப்பில் வீடுகளின் விலை அதிகமானதாக இருப்பதையும் ஒப்புக் கொண்ட அவர் அரசு திட்டங்களில் மக்கள் வாங்கும் ஆற்றலுக்கு உட்பட்ட நிலையில் வீடுகளின் விலை இருப்பது மிகவும் அவசியம் என்றார்.அதில் சிலாங்கூர் மாநில அரசு தனித்துவ கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மக்கள் சொந்த வீடுகளை கொண்டிருக்க புதிய வியூகம் அமைக்கும் அதேவேளையில் 20,000 வீடுகளை கட்டவும் இலக்கு கொண்டிருப்பதாக கூறினார்.

சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடமையின் (எல்.பி.எச்.எஸ்) கீழ் சுமார் 156 வீடுகளை கட்டுவதற்கு இலக்கு கொண்டிருப்பதாகவும் தெரிவித்த மந்திரி பெசார் சிலாங்கூர் மாநிலம் கோலாலம்பூர் மாநகரத்தோடு ஒட்டியிருப்பதால் மக்களின் கவனமும் இம்மாநிலத்தின் மீது விரிந்திருப்பதாக குறிப்பிட்டார்.

மக்கள் நலனுக்காக இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசோடும் அது சார்ந்த அமைச்சோடும் கைகோர்த்து செயல்பட மாநில அரசு தயாராகவே இருப்பதாகவும் மந்திரி பெசார் கூறினார்.


Pengarang :