ANTARABANGSA

80 ஆண்டுகால அரசியல் சகாப்தம் மறைந்தது !!

சென்னை, ஆகஸ்ட் 7:

ஐந்துமுறை
முதலமைச்சராகவும் 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியேற்று சரித்திரம் படைத்த 80ஆண்டுகால அரசியல் சகாப்தம் கலைஞர் கருணாநீதி தனது 95வது வயதில் காலமானார்.

பல்துறை வல்லமையும் பன்முக ஆளுமையும் கொண்ட கலைஞர் கருணாநீதி இதுவரை ஒரு தேர்தலில் கூட தோல்வி அடையாத அரசியல் சாணக்கியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்துவ தமிழ் ஆளுமையும் சிறந்த சிந்தனையாளரும்,எழுத்தாளருமான கலைஞர் இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் தனிபெரும் தலைவராக விளங்கினார்.

அறிஞர் அண்ணாவின் அரசியல் வாரிசாகவும் பெரியாரின் பகுத்தறிவு களஞ்சியமாக விளங்கிய கருணாநீதி தனது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பல்வேறு மேம்பாடுகளை கொண்டு வந்ததோடு பகுத்தறிவு திட்டங்களையும் அமல்படுத்திய பகுத்தறிவு சூரியனாகவும் திகழ்ந்தார்.

அரசியல் எதிரிகளையும் துரோகிகளையும் தனது சாதுரியத்தால் களையெடுத்து அரசியலில் வெற்றி நடைபோட்ட இவர் பிராமண ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றதோடு தமிழ்நாட்டில் இரட்டை குவளை திட்டத்தையும் ஒழித்தார்.

சாதியம்,தீண்டாமை உட்பட பல்வேறு ஒடுக்குமுறைகளை தீ இட்டுக் கொளுத்திய இவர் பெரியாரின் பகுத்தறிவு சுடரை தமிழ் நாட்டில் பரப்பிய சுடரொளி என்றுதான் கூறனும்.

03.06.1924இல் பிறந்த கலைஞர் 07.08.2018இல் இந்திய நேரப்படி மாலை மணி 6.10க்கு காலமானதாக சென்னை காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

கலைஞர் கருணாநிதி யின் மறைவை தமிழ் சரிந்தது என்றும் உதய சூரியன் மறைந்தது என்றும் வேதனையில் தமிழ் நாடு மட்டுமின்றி உலக தமிழர்களே கண்ணீர் வடிக்கின்றனர்.

உலகில் தமிழினம் வாழும் வரை கலைஞர் கருணாநிதியின் தமிழ் புகழ் உயிர்க்கொள்ளும்.அவரது மறைவு நாம் கொண்டிருக்கும் இழப்புகளில் ஒன்றுதான்.

அரசியலில் கிங் மேங்கர் என்று கூறப்படும் கருணாநிதி மறைந்தும் மக்கள் மனதில் வாழும் சகாப்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

#சிவாலெனின்


Pengarang :