SELANGOR

48 இந்திய கிராமத்து தலைவர்கள் நியமனம்

ஷா ஆலம், நவம்பர் 23:

சிலாங்கூர் மாநிலத்தின் 48 இந்திய கிராமத்து தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டனர்.

அவர்களுக்காக நியமன கடித்தத்தை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு வீ.கணபதிராவ் வழங்கினார்.

இந்திய சமூகம் பாக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் நிலையான அங்கீகாரமும் மதிப்பும் கிடைத்திடல் வகையில் இந்த நியமனம் அமைவதாக கூறிய கணபதிராவ் இதன் மூலம் மாநில அரசாங்கத்தின் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் அரும்பணியினை நியமிக்கப்பட்ட இந்திய கிராமத்து தலைவர்கள் மேற்கொள்வார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உறவுப்பாலமாக விளங்கிடும் கிராமத்து தலைவர்கள் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன் நிலையில் தத்தம் பங்கினையும் சேவையினையும் செய்திடல் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மாவட்ட நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகள்,தேவைகள் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதோடு பிரச்னைகளை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் கிராமத்து தலைவர்களின் பணி என்றும் அரசாங்கத்தின் மீது தொடர்ந்து மக்கள் நம்பிக்கையையும் ஆதரவையும் மெய்ப்பிப்பதும் அவர்களின் இன்றியமையாத கடமை எனவும் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் வெ.500ஆக இருந்த இவர்களுக்கான அலவன்ஸ் இம்முறை வெ.700ஆக உயர்த்தப்பட்டுள்ளதோடு மட்டுமின்றி ஆண்டுக்கு வெ.10,000 மானியமாகவும் வழங்கப்படுகிறது.இதன் மூலம் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் சேவைகளை சிறந்த முறையில் செய்வதற்கும் இவை வழி செய்வதாக குறிப்பிட்டார்.

அலவன்ஸ் உயர்த்தப்பட வேண்டும் என முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதனை உடனே அமலுக்கும் கொண்டு வந்த மந்திரி பெசார் அமிரூடின் ஷாரிக்கு நன்றி பதிவு செய்த கணபதிராவ் நியமனம் செய்யப்பட்டவர்கள் விவேகமாய் தங்களின் சேவையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நியமனம் பெற்றவர்களில் கெ அடிலான் கட்சியை சார்ந்து 24 பேரும் ஜசெக பிரதிநிதி 18 பேரும் அமானாவை பிரதிநிதித்து 5 பேரும் பெர்சத்து கட்சியை சார்ந்த ஒருவரும் ஒருவரும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :