Selangorkini
SUKANKINI

லிவர்பூல் லீக் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது

லிவர்பூல், டிச.27-

30 ஆண்டுகளுக்குப் பிறகு லீக் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற வேட்கையுடன் இருக்கும் லிவர்பூல், இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. புதன்கிழமை அன்பீல்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் 4 – 0 என்ற கோல்களில் நியூகாசல் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

 

நியூகாசலுக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்த பருவத்தில் தோல்வியே காணாத தனது சாதனையை லிவர்பூல் தக்க வைத்து கொண்டுள்ளது. 51 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல், மென்செஸ்டர் சிட்டியுடனான தனது புள்ளி வேறுபாட்டை ஏழாக அதிகரித்துக் கொண்டுள்ளது.

11 ஆவது நிமிடத்தில் லிவர்பூலின் முதல் கோலை டெஜான் லொவ்ரேன் போட்டார். முதல் பாதி ஆட்டம் 1 – 0 என்ற கோலில் முடிவடைந்த வேளையில் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 47 ஆவது நிமிடத்தில் முஹமட் சாலா, கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.

 

79 ஆவது நிமிடத்தில் ஷெர்டான் சக்கிரி லிவர்பூல் அணியின் மூன்றாவது கோலைப் போட்ட வேளையில், பாபின்ஹோ போட்ட கோல், லிவர்பூல் கிளப்பின் வெற்றியை உறுதிச் செய்தது. லீக் பட்டத்தை கைப்பற்றுவதில் லிவர்பூலுக்கு கடும் சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி 1 – 2 என்ற கோல்களில் லெய்செஸ்டர் சிட்டியிடம் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்றொரு ஆட்டத்தில் மென்சஸ்தர் யுனைடெட் அணியின் புதிய பயிற்சியாளர் ஓலே சோல்க்ஜெர் தலைமையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹட்டஸ்பீல்ட் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் சொந்த அரங்கான ஓல்ட் டிரட்ஃபட்டில்  வீழ்த்தி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியது.

 


Pengarang :