SELANGOR

சுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும்

கிள்ளான், டிசம்பர் 12 :

பாதுகாப்பும், சுபிட்சமும் அதேவேளையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பேணுமாறு சிலாங்கூர் சுல்தான்,சுல்தான் ஷராஃப்புடின் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்கும் கட்சியின் லாபத்திற்காகவும் இனவாத போக்கினை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் நினைவுறுத்தினார்.

நம்மவர்களிடையே இனம் மற்றும் மதம் சார்ந்த விவகாரங்கள் உணர்ச்சி மிகுந்ததாக காணப்படுவதை சுட்டிக்காண்பித்த சுல்தான் அவ்விவகாரங்களில் விழிப்புடனும் தெளிவுடனும் இருத்தல் அவசியம் என்றார்.

கொடுக்கப்படும் அல்லது முன் வைக்கப்படும் எந்தவொரு ஆலோசனையும் திட்டமும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.வரையறுக்கப்பட்ட சட்டம் அல்லது விதிமுறைகளை மீறுவதும் கடைபிடிக்க மறுப்பதும் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கும் எனவும் கூறினார்.

அதேவேளையில்,அன்மையில் சீபில்ட் ஆலயத்தில் நடந்தேறிய சம்பவம் குறித்து கவலை தெரிவித்த சுல்தான் அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் மற்றும் பொது மக்கள் நிலை குறித்தும் வருந்தினார்.

பல்லினம் மிகவும் ஒற்றுமையோடும் புரிந்துணர்வோடும் வாழும் மலேசியாவில் நாம் தொடர்ந்து நல்லிணக்கத்தோடும் சகோதரத்துவத்தோடும் கூடி வாழ்தல் அவசியம் என்றார்.

தனது 73வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற் விருந்தோம்பலில் சுல்தான் சிலாங்கூர் மேற்கண்டவாறு நினைவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர் இனவாதம் மற்றும் மதவாத செயல்பாடுகள் அன்மைய காலமாய் நாட்டின் நல்லிணக்கத்தை சற்று உரசிப்பார்த்திருப்பதாக கூறிய அவர் இந்நிலை தொடரக்கூடாது என்றார்.

நம்மிடையே தொடர்ந்து அமைதியும்,சுபிட்சமும்,பாதுகாப்பும் மற்றும் நல்லிணக்கமும் மேலோங்கி உயிர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Pengarang :