NATIONAL

அஸ்மின் வருகைக்கு சிங்கை வரவேற்பு

ஷா ஆலம், ஜன.14:

சிங்கப்பூருக்கு வருகையளித்ததோடு அக்குடியரசின் அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய டத்தோஸ்ரீ முகமட் அஸ்மினின் நடவடிக்கையை சிங்கப்பூர் அரசு வரவேற்றது.

நாளை நடைபெறவிருந்த 14ஆவது அமைச்சர்களுக்கு இடையிலான இஸ்கந்தர் மலேசியா குறித்த செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட போதிலும் அந்நாட்டு தலைவர்களுடன் சந்திப்பு நடத்திய அஸ்மினை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு பாராட்டியது.

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் வருகை மேற்கொண்டுள்ள் அஸ்மின், அந்நாட்டின் மேம்பாட்டு அமைச்சர் லாரன்ஸ் வோங் மற்றும் வெளி விகார அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார்.

இரவு உணவின் போது இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக கூறிய விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூர் நதியோரம் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்.

மாற்றம் கண்டு வரும் உலக பொருளாதாரச் சூழலில் இரு நாடுகளும் ஒத்துழைக்கும் வாய்ப்புகள் குறித்து இருவரும் வெளிப்படையாக கருத்துகள் பரிமாறிக் கொண்டதாக அவர் சொன்னார்.

இதனிடையே, இந்தச் சந்திப்பானது, கடந்த ஜனவரி 8ஆம் தேதி இருநாட்டு வெளியுறவு துறை அமைச்சர்களுக்கும் இடையே நடந்த சந்திப்புக் கூட்டத்தின் போது காணப்பட்ட உடன்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என்று விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் கூறியது.


Pengarang :