NATIONAL

உணவகங்களில் புகைபிடிக்கத் தடை : ஊராட்சி அமலாக்கப் பிரிவு ஒத்துழைக்கும்

புத்ரா ஜெயா, ஜனவரி 3:

அனைத்து வகை உணவகங்களின் சுகாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் புகைபிடிக்கத் தடை விதிக்கும் நடவடிக்கையை வலுப்படுத்த மலேசிய சுகாதார அமைச்சு எடுக்கும் முயற்சிகளை வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு வரவேற்கிறது.

இந்தத் தடை உத்தரவு முறையாகவும் உறுதியாகவும் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய சுகாதார அமைச்சின் அமலாக்கப் பிரிவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி ஊராட்சி அமலாக்கத் தரப்பு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் புவான் ஹாஜா சுரைடா கமாருடின் தெரிவித்தார்.

ஊராட்சி மன்ற அமலாக்கப் பிரிவினர் அவ்வப்போது உணவகங்கள் மீது நடத்தும் சோதனை நடவடிக்கைகளின் போது, இந்தத் தடை உத்தரவை உணவக நடத்துநர்களும் வாடிக்கையாளர்களும் கடைபிடிக்கப்பதையும் இவர்கள் கண்காணிப்பர் என்றும் அவர் சொன்னார்.

இந்நடவடிக்கையானது, நீடித்த சமூகம் மற்றும் தலைமுறையினரை அடிப்படையாகக் கொண்டு மலேசியாவை ஒரு மேம்பாடடைந்த நாடாக உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சியை பிரதிபலிப்பதாக அமையும் என்றார் அவர்.
இந்த உன்னத முயற்சிகள் யாவும் ஓர் ஆரோக்கியமான, கலாச்சாரமிக்க மலேசிய குடிமக்களை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

மாண்புமிகு புவான் ஹாஜா ஸூரைடா கமாரூடின்
வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர்
புத்ரா ஜெயா
ஜனவரி 3, 2019


Pengarang :