NATIONAL

எஸ்எஸ்பிஎன் திட்டத்திற்கு 4 விழுக்காடு லாப ஈவு! பிடிபிடிஎன் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜன.29:

தேசிய கல்வி சேமிப்புத் திட்டத்தின் 2018 எஸ்எஸ்பிஎன்-ஐ மற்றும் எஸ்எஸ்பிஎன் – ஐ பிளஸ் ஆகிய இரு திட்டங்களுக்கும் 4 விழுக்காடு லாப ஈவு தொகை வழங்கப்படும் என்று தேசிய உயர்க்கல்வி நிதிக் கழகம் (பிடிபிடிஎன்) இன்று அறிவித்தது.

இதற்காக, பிடிபிடிஎன் -இல் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் 3.91 மில்லியன் பேருக்கு பகிர்ந்தளிக்க மொத்தம் 114.44 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வான் சைஃபுல் வான் ஜான் கூறினார்.

இந்த கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தொகையின் மூலம் பெறப்பட்ட நிகர லாபத்தின் அடிப்படையில் இந்த 4 சதவித ஈவு தொகை வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் சவால்மிக்க பொருளாதாரச் சூழ்நிலையிலும் இந்த விகிதத்தை நிலைநிறுத்த பிடிபிடிஎன் தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

இதர சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் லாப ஈவுத் தொகைக்கு நிகராக இத்திட்டத்திற்கும் ஈவுத் தொகை வழங்கப்படுவதன் மூலம் எஸ்எஸ்பிஎன் திட்டம் மக்களைக் கவரும் என்றும் மக்களின் முதல் தேர்வாக இந்த சேமிப்புத் திட்டம் அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :