SELANGOR

சிறந்த செயல்திறன் குறியீட்டை அடைந்தால் 2 மாதத்திற்கும் கூடுதலான போனஸ்!

ஷா ஆலம், ஜன.29:

சிலாங்கூர் அரசு பணியாளர்களின் முக்கிய செயல்திறன் குறியீடு அதன் இலக்கை அடைந்தால், அவர்களுக்கு 2 மாத ஊதியம் அல்லது அதற்கும் கூடுதலான தொகை போனஸாக வழங்கப்படும் என்று 500க்கும் மேற்பட்ட மாநில அரசு பணியாளர்கள் முன்னிலையில் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி வாக்குறுதி அளித்தார்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்குவதற்கு மாநில அரசு தொடர்ந்து முயன்று வருவதாக அவர் சொன்னார்.

“கடந்த ஆண்டு இரண்டு மாத ஊதியம் வழங்கப்பட்டது. இவ்வாண்டு இன்னும் அதிகமாக வழங்க எண்ணியுள்ளோம், ஆனால் அனைவருக்கும் இதே அளவு கிடைக்காது. சிலருக்கு அவற்றில் பாதி அல்லது கால் பகுதி மட்டுமே கிடைக்கலாம்.”

சம்பந்தப்பட்ட துறை அல்லது தனிநபர் முக்கிய செயல்திறன் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டே அரசு மதிப்பிடும் என்றும் மேலும் அது மாநிலத்தின் வருவாயைப் பொறுத்தே அமையும் என்றும் இங்குள்ள சுல்தான் அப்துல் அஸிஸ் ஷாவில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசு பணியாளர்களுடனான மாதாந்திர சந்திப்பின் போது அமிருடின் ஷாரி தெளிவுபடுத்தினார்.


Pengarang :