dav
NATIONAL

தேர்தல் இன்றி பெண்கள் நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஜன.14:

தேர்தல் நடவடிக்கை இல்லாமல், மகளிரை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு நியமனம் செய்ய வேண்டும் என்று கெஅடிலான் மகளிர் தலைமைத்துவம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.

அரசாங்க முடிவுகள் எடுக்கும் பிரிவில் பெண்கள் 30 விழுக்காடு இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைய இந்நடவடிக்கை உதவும் என்று அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவர் ஹனிஸா தல்ஹா கூறினார்.

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டையும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸீசா இஸ்மாயிலையும் சந்தித்து இப்பரிந்துரையை முன்வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நியமிக்கப்படும் இந்தப் பெண்கள் எந்தவொரு தொகுதியையும் பிரதிநிதிக்க மாட்டார்கள். மாறாக, ஒட்டு மொத்த மகளீர் சமூகத்தைப் பிரதிநிதித்து மக்களவையில் இவர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்பதே தாங்கள் பரிந்துரைக்கும் தேர்தல் சீரமைப்புகளில் ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.

பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் நடைபெற்ற கெ அடிலான் 2019 சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேச மகளிர் அணி மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்ததோடு மகளிருக்கு எதிரான வன்முறையை ஒழிக்க வேண்டும் என்ற இயக்கத்தையும் தொடக்கி வைத்த பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கெஅடிலான் உதவித் தலைவர் சுரைடா கமாருடின், சிலாங்கூர் கெஅடிலான் மகளிர் தலைவி டாக்டர் டாரோயா அல்வி மற்றும் கூட்டரசு பிரதேச கெஅடிலான மகளிர் தலைவி இடாவாத்தி பரிமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பரிந்துரைக்கப்பட்ட இந்த நடைமுறையானது ஜெர்மன் மற்றும் ஆப்பிரிக்காவில் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் மலேசியாவும் இதை அமல்படுத்தினால் அரசாங்கத்தின் கொள்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :