NATIONAL

நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் வாழ்த்துச் செய்தி 

அனைவருக்கும் எமது தைப்பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்

இந்நாட்டில் தை புத்தாண்டு பொங்கலைக் கொண்டாடும் எல்லா மக்களுக்கும் இனிய தை புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. தை பிறந்து விட்டது வழிபிறக்க வேண்டும் அதற்கு ஆண்டவன் துணையும், மக்களின் விவேகமும், விழிப்புணர்வும் தேவை என்று கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்

ஆக, அந்த இரண்டு மகா சக்திகளும் இணைந்து இந்நாட்டுக்கு அளித்துள்ள ஒரு மாபெரும் ஆசியே, நம் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம். நீண்ட நாட்களாகக் கண்கள் கட்டப்பட்ட மாணவர்களாக, ஆசிரியர்களாகவும்; கரங்கள் கட்டப்பட்டு, வாய் பூட்டப்பட்ட பத்திரிக்கையாளர்களாக, தொழிலாளர்களாக, தொழிற்சங்கவாதிகளாக அரசியல் வாதிகளாக இருந்த மக்களுக்கு விமோசனம் அளிப்பதே மாற்றம். அதனை நம் உரிமை நிலைபெற, இனம் உயர்வு பெற நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உண்மையான, சுதந்திரமான நாட்டின் வழியே ஒரு ஆரோக்கியமான, கற்றறிந்த, விழிப்பான சமுகத்தை உருவாக்க முடியும். விழிப்பான சமுதாயமே வாழ்வில் வளமடையும், அதற்கே வழியும் பிறக்கும். இந்த இனிய தை பொங்கள் நாளில், அந்தப் பாக்கியம் மலேசியர்கள் அனைவருக்கும் கிட்ட வாழ்த்துகிறேன் என்றார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

கடந்த பொதுத் தேர்தலில் ஊழல் காரணமாக ம.இ.கா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் இழந்த பகாங் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை இந்த இடைத்தேர்தலில் ம.இகாவிடமிருந்து அம்னோ அபகரித்ததின் வழி அம்னோவின் நரிகுணம் அம்பலமாகியுள்ளது, உள்ளிருந்தே இந்தியர்களையும், நாட்டையும் கெடுத்த ஒரு எதிரியை இந்தியர்கள், குறிப்பாக ம.இகா உறுப்பினர்கள் முழுமையாக அடையாளம் காண வாய்ப்பு ஒரு கிடைத்தமைக்கு இந்தப் பொங்கல் திருநாளில் சந்தோஷமடைய வேண்டும்.

மலேசியர்களின் முதல் எதிரி அம்னோ என்பதே இந்நாட்டு எதிர்க்கட்சிகளின் நீண்ட நாளைய குற்றச்சாட்டு, ஒரு காலத்தில் அதனை ஏற்காமல் புறக்கணித்த மக்கள் படிபடியாக அதனைப் புரிந்து கொண்டதால் கடந்த தேர்தலில் தேசிய அளவில் அம்னோவின் பாரிசான் நேஷனலை புறக்கணித்து வீட்டுக்கு அனுப்பினர். அதன் சொந்த உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் அதன் பங்காளி கட்சிகளும் அம்னோவுடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டு கட்சியை விட்டு வெளியேறினார்கள்.

ஆனால் அம்னோவிற்குச் சோதனையான எல்லாக் காலத்திலும் அதற்குத் துணையாக இருந்த ம.இ.கா வுக்கு அம்னோ செய்து கைமாறு, ம.இ.காவின் பாரம்பரியத் தொகுதியான போர்டிக்சன் இடைத்தேர்தலில், ம.இ.கா வின் கருத்தைக் கேட்காமலேயே அந்தத் தொகுதியில் பாரிசான் போட்டியிடாது என அறிவித்தது. இன்று, ம.இ.காவின் மற்றொரு தொகுதியான கேமரன் மலையை, மூர்க்கந்தனமாக ம.இ.கா விடமிருந்து பிடுங்கி கொண்டது.

எல்லாக் காலத்திலும் அம்னோவிற்கு மிக விசுவாசமாக, அக்கட்சிக்கு எதிராக ஒரு வார்த்தை கூடக் கூறாமல் அதனுடன் தோழமை கொண்ட ம.இ.கா விற்கு அம்னோ செய்த நன்றி கடனின் அடையாளமாகக் கேமரன்மலை அபகரிப்பு நடந்துள்ளது. ஆக, இந்நாட்டில் இந்தியர்கள் எதிர் நோக்கும் அனைத்து இடையூறுகளுக்கும், இன்னல்களுக்கும் காரணகர்த்தா அம்னோவே என்றால் அது மிகையாகாது.

நாட்டின் ஆட்சி கட்டிலில் இல்லாத இன்றும், எல்லா மக்களும் சமம் என்னும் கொள்கைக்கு எதிராகவும், இந்தியர்களின் குடியுரிமை மீது, சமயச் சுதந்திரத்தின் மீது, தாய்மொழி கல்வி மீது, பொருளாதார மீட்சி மீது அரசாங்கக் கொள்கைகளுக்குத் தடை கல்லாக இருப்பது அம்னோவே என்பதற்குச் சான்றாக அமைந்தது சமீபத்தில் கோலாலம்பூரில் நடந்த ஐக்கிய நாட்டு சபையின் இன ஒதுக்கல் கொள்கை மீதான தீர்மானத்தை மலேசியா ஆதரிக்கக் கூடாது என்று அதன் ஆர்ப்பாட்டமாகும்.

இன வேறுபாட்டை அப்பட்டமாகப் போற்றும் அம்னோ, மற்ற இனங்களின் மேம்பாட்டில் எப்படிக் கவனம் செலுத்தும், உற்ற நண்பன் ம.இ.காவுக்கே தீங்கு விளைவிக்கும் அம்னோ இந்தியர்களுக்கு உதவியாக இருக்குமா என்பதை இந்தியர்கள் ஆராய வேண்டும்?

தைப்பொங்கலை உழவர் தினமாக மட்டுமின்றி ஒற்றுமை தினமாகக் கொண்டாடும் நாம், இந்த வேளையில் சமயப் பேதம் மட்டும் கடந்தல்ல, அரசியல் பேதமும் கடந்து எல்லோருக்கும் கை கொடுப்போம் அனைவரும் கூடி வாழ்வோம், கோடி சுகம் பெறுவோம் என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.


Pengarang :