SELANGOR

நெகிழி கழிவு இறக்குமதியை நிறுத்துவிடுங்கள் – ஸி ஹான்

ஷா ஆலம், ஜனவரி 7:

நெகிழி கழிவுப் பொருட்களுக்கான இறக்குமதி அனுமதி (ஏபி) வழங்கப்படுவதற்கு முன்னர் தொழில்துறையினர் புதிய நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சு உறுதி செய்யும்.
அதேவேளையில், இந்த ஏபி வழங்கப்படுவதை நிறுத்துவது குறித்தும் அமைச்சு பரிசீலித்து வருவதாக ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புது கிராம மேம்பாட்டு துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.

தொழில்துறைக்குத் தேவையான அளவு இந்தக் கழிவு பொருள் கிடைப்பதால், இந்தப் பொருளுக்கான இறக்குமதி அனுமதியை முழுமையாக நிறுத்துவது சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று தாம் கருதுவதாக அவர் சொன்னார். ஆயினும், மறுசுழற்சி திட்டத்தை அமலாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நெகிழி கழிவுத் தொழில்துறை மாநில அரசாங்கத்திற்கு அதிக வருவாய் ஈட்டுவதில்லை என்றும் அவர் சொன்னார். நெகிழி கழிவுப் பொருள் இறக்குமதியால் நாட்டின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பொருள் இறக்குமதியைத் தொடர்வது குறித்து அரசு நன்கு ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியம் என்றார்.

இந்த இறக்குமதிக்கான அனுமதி வழங்குவது கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த அனுமதி வழங்குவது இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் புவான் ஹாஜா சுரைடா கமாருடின் நேற்று முன்தினம் கூறியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Pengarang :