NATIONAL

நேரடி பேச்சுவார்த்தை மூலம் மணல் ஏற்றுமதிக்கு அனுமதியா?அமைச்சு மறுப்பு

ஷா ஆலம், ஜன.17:

நேரடி பேச்சு வார்த்தை மூலம் நான்கு நிறுவனங்களுக்கு மணல் ஏற்றுமதி செய்ய அனுமதியளித்ததாக கூறப்படுவதை குடிநீர், நிலம் மற்றும் இயற்கை வளத் துறை அமைச்சு மறுத்தது.

மாறாக, விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் அவை கடந்த பின்னரே அந்த அனுமதி வழங்கப்பட்டது என்று அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கை தெரிவித்தது.

நேரடி பேச்சு வார்த்தை வழி அந்த 4 நிறுவனங்களுக்கும் மணல் ஏற்றுமதி அனுமதி வழங்கப்பட்டதாக கூறுவது தவறாகும். ஏனெனில், அந்த நிறுவனங்களின் விண்ணப்பங்களை மாநில அரசு அங்கீகரித்த பின்னரே அமைச்சு அனுமதி அளித்தது.

2017ஆம் ஆண்டு ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் சுங்கத் துறையின் 2ஆவது அட்டவணையில் இடம்பெற்றிருக்கும் பொருள்களில் ஒன்றான மணலை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி அளிப்பதற்கு முன்னர் பல்வேறு நடைமுறைகளை அமைச்சு பரிசீலனை செய்யும் என்று அவ்வறிக்கை விளக்கியது.

மேலும், மணல் கிடைக்கும் பகுதி சம்பந்தப்பட்ட மாநில அரசு விதிக்கும் விதிமுறைகளுக்கு உட்படும் நிறுவனங்களை மட்டுமே அமைச்சு பரிசீலனை செய்யும்.

விதிக்கப்படும் விதிமுறைகளைக்கு உட்படும் எந்தவொரு நிறுவனமும் இந்த மணல் ஏற்றுமதி அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அது கூறியது.


Pengarang :