SELANGOR

மக்களுக்கு உதவ ஐபிஆர் உதவித் திட்டம் மறுசீரமைக்கப்படும்

ஷா ஆலம், ஜன.10:

மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஐபிஆர் எனப்படும் மக்கள் நலத் திட்டத்தை மாநில அரசாங்கம் மறுசீரமைக்கவுள்ளது.

ஒவ்வொரு தனிநபருக்கும் தேவை அளவும் மாறுபட்டிருக்கும். எனவே அவர்களின் தேவைக்கு ஏற்ப உதவிகள் வழங்கப்படுவதை இந்நடவடிக்கை உறுதிசெய்யும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷா கூறினார்.

உதாரணமாக, கிஸ்ஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் தாய்மார்களுக்கான உதவி திட்டம் வழியாக 40,000 மாதர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக தலா 200 வெள்ளி வழங்கி வந்துள்ளோம்.

ஆயினும், இந்தத் தொகையை சற்று அதிகரித்து அவற்றைக் கொண்டு அந்த மாதர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகள் வழங்கினால், அவர்கள் சொந்தக் கால்களில் நிற்கும் நிலை ஏற்பட்டு அரசாங்கத்தைச் சார்ந்திருக்கும் நிலை மாறலாம் என்றார் அவர்.

“சம்பந்தப்பட்ட தரப்பினரின் வருமானம் உயர அவர்கள் வர்த்தகம் புரிய அல்லது அவர்களது திறனை வளர்த்துக் கொள்ள உதவும் திட்டங்களை நாம் அதிகரிக்கவுள்ளோம்.”

எனவே, ‘கிஸ்’ திட்டம் வழி தற்போது உதவி பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, உதவி தேவைப்படும் இதர குடும்பங்களுக்கு இந்த உதவி சென்றடையும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.


Pengarang :